2022- 2023ஆம் ஆண்டில் மாநில அளவிலான ஓவிய- சிற்பக் கலைக்காட்சியை முன்னிட்டு,  ஓவியங்கள் மற்றும் சிற்பங்களின் புகைப்படங்கள் வரவேற்கப்படுகின்றன.  


இதுகுறித்துத் தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது: 


“2022- 2023ஆம் ஆண்டில் மாநில அளவிலான ஓவிய- சிற்பக் கலைக்காட்சியினை நடத்த ஏதுவாக, முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்களிடமிருந்து ஓவியங்கள் மற்றும்  சிற்பங்களின் புகைப்படங்கள் பின்வரும் விதிமுறைகளின்படி வரவேற்கப்படுகின்றன. கலை பண்பாட்டுத்தறை நுண்கலைப் பிரிவில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான மரபு வழி / நவீன பாணி பிரிவில் ஓவிய- சிற்பக் கலைக்காட்சிகளைத் தொடர்ந்து நடத்தி, சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் கலைஞர்களுக்கு பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கலைஞர்களை ஊக்குவித்து வருகிறது.


அவ்வகையில் 2022- 2023ஆம் நிதியாண்டில் மாநில அளவிலான ஓவிய- சிற்பக் கலைக்காட்சி நடத்தி,  ஓவியக் கலை பிரிவில் (மரபு வழி / நவீனபாணி) சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் 30 வயதிற்கு மேற்பட்ட 15 மூத்த கலைஞர்களுக்கு தலா ரூ.15,000/-வீதமும், 30 வயதிற்குட்பட்ட 10 இளங்கலைஞர்களுக்கு தலா ரூ.10,000/-வீதமும், சிற்பக்கலை பிரிவில் (மரபுவழி / நவீனபாணி) சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் 30 வயதிற்கு மேற்பட்ட 15 மூத்தக் கலைஞர்களுக்கு தலா ரூ.15,000/-வீதமும், 30 வயதிற்குட்பட்ட 10 இளங்கலைஞர்களுக்கு தலா ரூ.10,000/-வீதமும் பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. 


2022- 2023ஆம் ஆண்டில் மாநில அளவிலான ஓவிய-சிற்பக் கலைக்காட்சியினை நடத்திட ஏதுவாக, முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்களிடமிருந்து ஓவியங்கள் மற்றும்  சிற்பங்களின் புகைப்படங்கள் பின்வரும் விதிமுறைகளின்படி வரவேற்கப்படுகின்றன.


* ஓவிய, சிற்பக் கலைக்காட்சியில் கலந்து கொள்ள விரும்பும் கலைஞர்கள் தங்களின் புகைப்படத்துடன் (Passport Size Photo) கூடிய தன்விவரக் குறிப்புடன் (பெயர், பிறந்த தேதி, கலைப்பிரிவுகளில் பெற்றுள்ள கல்வித் தகுதிகள், படைப்பின் தலைப்பு, படைப்பின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன்) ஓவியங்கள்/ சிற்பங்களின் (10 x 12 அளவு)  இரண்டு புகைப்படங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.


* கலைஞர்கள் மரபுவழிப் பிரிவிலோ அல்லது நவீனபாணி பிரிவிலோ என ஏதேனும் ஒரு பிரிவில் மட்டும் கலந்து கொள்ள வேண்டும்.


* கலை பண்பாட்டுத்துறையின் வாயிலாக கலைச்செம்மல் விருது பெற்றவர்கள், கடந்த ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தோர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கக் கூடாது.


* ஓவியர்கள் மற்றும் சிற்பிகளிடமிருந்து பெறப்படும் புகைப்படங்களில் இருந்து, கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தெரிவுக்குழுவின் மூலம் சிறந்த புகைப்படங்கள் மாநில அளவிலான ஓவிய-சிற்ப கலைக்காட்சிக்கு தெரிவு செய்யப்பட்டு, தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் உரிய விவரங்கள் இவ்வலுவலகத்தினால் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் ஓவியப் படைப்புகளும், சிற்பங்களும் பெறப்பட்டு கலைக்காட்சியில் வைக்கப்படும். 


* கலைக்காட்சிக்கு வைக்கப்படும் அசல் ஓவிய, சிற்ப படைப்புகளில்  சிறந்த கலைப்படைப்புகள் தெரிவுக்குழுவால் பரிசுக்கு தேர்வு செய்யப்படும். மேற்காணும் விவரங்களின் அடிப்படையில் உரிய தன் விவரக்குறிப்புடன்  ஓவியங்களின் / சிற்பங்களின் புகைப்படங்களை டிசம்பர் 23-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.