நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த மார்ச் மாதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது, இரண்டாவது அலை காரணமாக தீவிரமாக பரவி வருகிறது. இதன் தாக்கத்தினால், தமிழ்நாடு முழுவதும் தினசரி 30 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பும் கடந்த நான்கு நாட்களாக 300-க்கும் மேல் பதிவாகி வருகிறது.


கொரோனா தடுப்புப்பணிகளை புதியதாக பதவியேற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 24-ஆம் தேதி வரை ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமலில் உள்ளது.




மேலும், கொரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும், வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்டும் வருகின்றனர். மேலும், சுகாதாரத்துறை சார்பிலும் தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் அடங்கிய குழு ஒன்றை அமைத்தார். இந்த குழுவில் தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் உள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்வதற்கு இன்று சேலம் சென்றுள்ளார். இந்த நிலையில், அவர் வரும் 22-ஆம் தேதி(நாளை மறுநாள்) தமிழகத்தில் உள்ள கொரோனா நிலவரம், கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு, மேற்கொள்ளவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கொரோனா தடுப்பு ஆலோசனை குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.




இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உற்பத்தி, ரெம்டெசிவிர் மருந்து, கொரோனா தடுப்பு முகாம்கள், கொரோனா சிகிச்சை மையங்கள், தடுப்பூசிகள் செலுத்துவது, சித்த மருத்துவத்தை கையாள்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இந்த ஆலோசனை குழு வழங்கும் ஆலோசனைகளின்படி, முதல்-அமைச்சர் சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார். மாநிலம் முழுவதும் ஊரடங்கு வரும் 24-ந் தேதியுடன் நிறைவு பெற உள்ள நிலையில், இந்த ஆலோசனைக்கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளைப் பொறுத்தே ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்தும், தளர்வுகள் அறிவிக்கப்படுவது குறித்தும் முடிவு எடுக்கப்பட உள்ளது.  


இந்த குழுவில் மேலும் காங்கிரஸ் சார்பில் ஏ.எம்.முனிரத்தினம், பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, பா.ஜ.க. சார்பில் நயினார் நாகேந்திரன், ம.தி.மு.க. சார்பில் சதன் திருமலைக்குமாார், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ராமச்சந்திரன், மார்க்சிஸ்டு சார்பில் நாகை மாலி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன், புரட்சி பாரதம் சார்பில் பூவை ஜெகன்மூர்த்தியார் இடம் பெற்றுள்ளனர்.