தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த நாகராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் " சங்கரன்கோவில் வழியாக திருநெல்வேலி செல்லும் பிரதான சாலையை ஒட்டி அமைந்துள்ள அருள்மிகு அருவம் சூடிய விநாயகர் கோயில் அருகே, சர்வே எண் 888/3-ல், 32.0 ஹெக்டேர் பரப்பளவில் சங்கரன்கோவில் கிராமத்தில் மின் மயானம் அமைக்க, சங்கரன்கோவில் நகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த அருவம் சூடிய விநாயகர் கோயில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கற்கோயில் ஆகும்.

 

இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர் குறிப்பாக திருச்செந்தூர் யாத்திரை செல்லும் பக்தர்கள் இங்குதான் ஓய்வு எடுக்கின்றன. சுமார் 200 ஏக்கர் ஈரமான நஞ்ச நிலங்களால் சூழப்பட்டுள்ளது இந்த கோவில். மேலும் இந்த நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கோவில் கட்டடத்தை ஒட்டிய நிலம் காலி இடமாக உள்ளதால், அறுவடை காலத்தில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் காலி இடத்தை களஞ்சியமாக பயன்படுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் பழமை வாய்ந்த கோயிலை ஒட்டி மயானம் அமைப்பது பழங்கால கோவிலையும் அதன் நினைவுச்சின்ன முக்கியத்துவத்தையும் பாதிக்கும்; புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கும், கோயில் கட்டிடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாகுபடிப் பணிகளில் விவசாயிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் எனவே அருவம் சூடிய விநாயகர் கோவிலை தொல்லியல் துறை ஆய்வு செய்து பழங்கால சின்னமாக அறிவிக்கவும், கோவில் அருகே மின் மயானம் அமைப்பதற்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, தமிழக தொல்லியல் துறை ஆணையர் தொடர்புடைய இடத்தை ஆய்வு செய்து மனுதாரர் மனுவை பரிசீலித்து 6 மாதத்திற்குள் உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 








 

கணவரின் இறப்பு சான்றிதழை வழங்க  கோரிய வழக்கு - கன்னியாகுமரி ஆட்சியர்  பதில் தர உத்தரவு

 

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மரிய அல்பி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது கணவர் ராபர்ட் சேவியர் ராஜ் மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி நைஜீரியா கடல் பகுதியில் இருந்த போது பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 ஊழியர்கள் உயிரிழந்தனர். அவர்களில் 4 பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் எனது கணவரின் உடல் மீட்கப்படவில்லை. எனது கணவர் இறந்ததாக நைஜீரிய காவல்துறை தரப்பில் இருந்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எனது கணவரின் இறப்பு சான்றிதழ் தற்போது வரை வழங்கப்படவில்லை.

 

கணவர் இறப்பு சான்றிதழ் வழங்கக் கோரி அதிகாரிகளுக்கு பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை காவல்துறையினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எனது கணவரின் இறப்பு சான்றிதழை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் நைஜீரிய காவல்துறையின் அறிக்கையின் அடிப்படையில் மனுதாரர் கணவரின் இறப்பு சான்றிதழை வழங்க என்ன தடை உள்ளது என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.