சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பாஜக போராட்டம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


கடந்த இரு வாரத்திற்கு முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையாக வெடித்தது. இந்த கருத்து குறித்து பிரதமர் மோடி வரை கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.  இந்தநிலையில், சனாதன தர்மம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.  


ஆர்ப்பாட்டம் நடைபெற்றது எங்கே..?


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜக துணை தலைவர் கரு. நாகராஜன் முன்னிலை வகிக்க, ணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரி தேவி, உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சென்னையின் முக்கிய போக்குவரத்து சாலையான வள்ளுவர் கோட்டம் சாலையில் பாஜகவினர் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அண்ணாசாலை, கோடம்பாக்கம், தி.நகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டனர். இதையடுத்து, வாகன ஓட்டிகள் படும் சிரமத்தை கருத்தில்கொண்டு அண்ணாமலையிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை ஏற்றுகொண்ட அண்ணாமலை போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்த நிலையில், பாஜகவினர் கலைந்து சென்றனர். இதனால் வள்ளுவர் கோட்டம் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பான சூழல் நிலவியது. 


ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியாதவது, “ சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். அதனை அருகிலிருந்து இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபும் கேட்டு ரசிக்கிறார். இந்து அறநிலைத்துறை அமைச்சர் பதவியிலிருந்து சேகர்பாபு பதவி விலகிவிட்டு ஒரு திமுக காரராக என்ன வேண்டுமானால் செய்யட்டும். மதங்கள் தோன்றியதற்கு முன்பே, தோன்றியது சனாதனம், எல்லா காலத்திலும் நிலைக்கு ஒரே தர்மம் இதுதான். 


காவல்துறைக்கு நாங்கள் வைக்கும் ஒரே வேண்டுகோள். சனாதன தர்மத்தை வேர் அறுப்போம் என பேசியவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, கரு. நாகராஜன் தலைமையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் கொடுக்க இருக்கிறோம். 


பொதுமக்களுக்காகத்தான் இந்த போராட்டம் நடத்தினோம். நாங்கள் கைதாகுவோம் என்று தெரிந்துதான் இங்கு வந்தோம். மகாத்மா காந்த் போராடும்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது என்று அவரிடம் கேட்டீர்களா..? அது நாட்டிற்காக ஏற்பட்ட பிரச்சனைக்காக அவர் போராடினார். அது நாட்டுக்கான பிரச்சனை என்றால் இதுவும் நாட்டுக்கான பிரச்சனைதான். ” என்றார்.