விழுப்புரம்: ஆரோவில் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை செய்த புதுச்சேரி இளைஞர்கள் 4 பேரை ஆரோவில் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதி பொம்மையார்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து வாடகைக்கு தங்கி இருக்கும் இளைஞர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி அடிக்கடி வந்து செல்வதாக ஆரோவில் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஆரோவில் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் அந்த இளைஞர்களை நோட்டமிட்டனர். நேற்று நள்ளிரவு மாற்று உடையில் சென்ற போலீசார் அந்த இளைஞர்கள் தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.
அப்போது அந்த இளைஞர்கள் கஞ்சாவை எடை மெஷினில் வைத்து எடை பிரித்து கொண்டிருந்தனர். வீட்டின் அறையில் இருந்த நான்கு இளைஞர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்கள் வைத்திருந்த 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சாவை எடை போடும் இயந்திரம், அவர்கள் வைத்திருந்த ஆறு செல்போன், அவர்களது இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரி எல்லைப்பிள்ளைசாவடி 100 அடி சாலையை சேர்ந்த குமார் மகன் தீபக் வயது 29, ரெட்டியார்பாளையம் தேவா நகர் பெலிக்ஸ் மகன் ஆல்பட்ராஜ் வயது 28, காமராஜர் சாலை நேரு நகர் சுந்தர் மகன் வெங்கடேசன் வயது 31, புதுவை சக்தி நகர் புண்ணியகோடி மகன் மணிகண்டன் என்கிற ராஜேஸ் வயது 32 ஆகிய நான்கு பேர் என்பதும்.
கடந்த பல மாதங்களாக ஆள் நடமாட்டம் இல்லாத இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தனியார் கம்பெனியில் வேலை பார்ப்பதாக கூறி அங்கு தங்கியிருந்ததும் தெரியவந்தது. மேலும் இவர்கள் சென்னை, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி அதனை தரம் பிரித்து புதுச்சேரி, ஆரோவில், காலாப்பட்டு, வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக கொடுத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து நான்கு பேர் கைது செய்த போலீசார் மேலும் இவர்கள் தொடர்பில் உள்ள சென்னை ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கஞ்சா விற்பனையாளர்கள் குறித்த விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
மரக்காணம் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய வெளிநாட்டவரின் சடலம்