நாட்டின் 75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த்(Vijayakanth), சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியினை ஏற்றினார். உடல்நிலை மோசமான நிலையில், தேமுதிக தலைவர் தேசிய கொடி ஏற்றியதை கண்ட தேமுதிக தொண்டர்கள் கதறி அழுதனர்.

  


நாட்டின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும்  மிகவும் கோலாகலமாக மத்திய, மாநில அரசுகள் தொடங்கி ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் மிகவும் கொண்டாட்டமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றினார்.






தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2011 ஆம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் தேர்தலைச் சந்தித்து எதிர்கட்சி தலைவரானார். எதிர்கட்சி தலைவராக இருந்த போது சட்ட மன்றத்தில் அதிமுகவினரையே அலறவிட்டார். தற்போதுவரை ஜெயலலிதாவை கெத்தாக எதிர்த்த ஒரே எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்.  அதன் பின்னர் சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்காமல் இருந்து வந்த விஜயகாந்த் தொடர்ந்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர், 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் முதல்வர் வேடபாளாராக களம் இறங்கினார். ஆனால் மக்கள் நலக்கூட்டணி படுதோல்வி அடைந்தது. இந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் யாரும் வெற்றி பெறவில்லை.


அதன் பின்னர், தனது உடல் நலனில் கவனம் செலுத்த தொடங்கிய விஜயகாந்த், சிகிச்சைக்காக வெளிநாடு சென்று வந்தார். இதன் பின்னர், தேமுதிக கட்சி, விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா விஜயகாந்தின் முழுக் கட்டுப்பாட்டில் வந்தது. அதன் பின்னர், ஒவ்வொரு தேர்தலிலும், தேமுதிக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியாக மட்டுமே இருந்து வந்திருக்கிறது.  2018ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவின் போது, வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்த விஜயகாந்த் மனமுருகி பேசி தனது ஆதங்கத்தினை வெளியிட்ட வீடியோ இன்று வரை இணையத்தில் காணலாம். தனது திருமணத்தினை நடத்தி வைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, எனக்கு தங்கப் பேனா வழங்கினார் என அவர் கூறும்போது அழுதுகொண்டே இருப்பார். 


தொடர்ந்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த விஜயகாந்தின் புகைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வந்தது. அதில் அவர் முற்றிலும் வேறு தோற்றாத்துடன் காணப்பட்டதால், தேமுதிக தொண்டர்கள் மட்டுமில்லாமல், விஜயகாந்தின் நலம் விரும்பிகளும், சினிமா வட்டாரங்களும் கொஞ்சம் கலங்கித்தான் போனார்கள்.


இந்நிலையில் விஜயகாந்த் அவர்களை இனி எப்போது பார்ப்போம் என தொண்டர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் ஆவல் ஏற்பட்டது. இன்று நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தினை தேமுதிக, சென்னை கோயம்பேட்டில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் கொண்டாடியது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றினார். ஆனால், மிகாவும் மோசமான உடல் நிலையில் இருந்த விஜயகாந்த் கொடி ஏற்றமுடியாமல், தடுமாறினார். மேலும், தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவதற்கே பிறரது உதவி தேவைப்படும் அளவிற்கு உடல்நிலை மோசமாக இருந்ததைக் கண்ட தேமுதிக் தொண்டர்களும், ரசிகர்களும் கண் கலங்கியபடி அங்கிருந்து விலகிச் சென்றனர்.


தனது திரைப்படங்கள் மற்றும் பொது வாழ்வில் மிகவும் மிடுக்காக தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி வந்த விஜயகாந்தின் உடல்நிலை இப்படி மாறும் என யாருமே எதிர் பார்க்கவில்லை என்பது தான் உண்மை.


விஜய்காந்த் தான் நடித்த தாயகம் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் சிலரை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றி இந்தியாவிற்கு அழைத்து வருவார். அப்போது அவர்கள் பாகிஸ்தான் ஹெலிகாப்டரில் இந்தியா திரும்புவர். இதை இந்திய அரசுக்கு தெரிவிக்க ஹெலிகாப்டரில் இருந்து தேசியக்கொடியை பறக்கவிடுவார் விஜயகாந்த். 






இதுபோன்ற ஸ்டண்ட் செயல்களை ரியலிஸ்டிக்காக செய்வது விஜயகாந்திற்கு ஒன்றும் பெரிய விஷயமில்லை. பெரும்பாலான சண்டை காட்சிகளுக்கு கூட தாமே ஒரிஜினலாக செய்ய வேண்டும் என்றே நினைப்பார். இந்த மனிதனுக்கா இந்த நிலைமை என அவரது தொண்டர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.  


தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு வயது 69 என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வரும் 25ஆம் தேதி தனது 70வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார்.