சத்யராஜ் மற்றும் விஜயகாந்த் ஆகியோர் தங்களது திரையுலக பயணத்தை கிட்டத்தட்ட ஒரே காலத்தில்தான் தொடங்கினர். ஆனால் விஜயகாந்த்தின் வளர்ச்சி யாருமே எண்ணிடாத வளர்ச்சி. தமிழ் சினிமா உலகின் புகழுக்கே சென்ற விஜயகாந்த் ஒருபோதும் தன்னை அதிகாரம் மிக்கவனாக சக மனிதனிடத்தில் காட்டியது இல்லை. 




”திரையுலகில் அள்ளிக் கொடுத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அதனை எங்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுத்தவர் புரட்சித் கலைஞர் விஜயகாந்த்” இப்படி குறிப்பிட்டுவிட்டுத்தான் விஜயகாந்த் குறித்து பேச்சை துவங்குவார் நடிகர் சத்யராஜ். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சத்யராஜ் , ”நான் நடித்து எனது நண்பர் தயாரித்த வள்ளல் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் இருந்தது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர் படத்தினை பார்த்த விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா படம் மிகவும் நன்றாக இருக்கின்றது எனக் கூறினார். இந்த படம் குறித்தும் படம் வெளியாவது குறித்தும் விஜயகாந்திடம் பிரேமலதா கூறியுள்ளார். அடுத்த நாள் காலை 6 மணிக்கே எனக்கு போன் செய்த விஜயகாந்த் அந்த படத்தில் என்ன பிரச்னை சத்யராஜ் எனக் கேட்டது மட்டும் இல்லாமல் உடனே அதனைச் சரி செய்து வள்ளல் திரைப்படம் வெளியாக முக்கிய காரணமாக இருந்தார். அப்போது நான் யோசித்தேன், வள்ளல் என்ற தலைப்பை எனது படத்திற்கு வைத்திருக்க கூடாது. விஜயகாந்த் படத்திற்கு வைத்திருக்க வேண்டும். அதேபோல் 'மக்கள் என் பக்கம்’ என்ற தலைப்பும் விஜயகாந்த் படத்திற்குதான் வைத்திருக்க வேண்டும், மாறாக எனது படத்திற்கு வைத்து விட்டேன். 




விஜயகாந்த் வாழ்க்கையில் இவ்வளவு உயரத்திற்கு வர முக்கிய காரணம் அவரது மனைவிதான். அவரது மனைவியைப் போல் அனைவருக்கும் மனைவி அமைந்து விட்டால் அனைவரும் வாழ்க்கையில் முன்னேற முடியும். பொதுவாகவே நண்பர் ஒருவருக்கு உதவ கணவன் பணம் கொடுக்கின்றார் என்றால் மனைவி எதற்காக அவருக்கு உதவவேண்டும்? நீங்கள் சம்பாதித்து அவருக்கு ஏன் கொடுக்குறீர்கள் என்றெல்லாம் கேட்பார்கள். ஆனால் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா இந்த பணம் அவர்களின் தேவைக்கு போதுமானதாக இருக்காது. இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொடுங்கள் என்று கூறுவார். 




தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் எங்கு பிரச்னை நடந்தாலும் சரி, குஜராத் நிலநடுக்கம் தொடங்கி கார்கில் போர் வரை,  முதலில் உதவித்தொகை கொடுப்பவர் விஜயகாந்த். அதன் பின்னர்தான் திரையுலகின் மற்ற நடிகர்கள் கொடுப்பார்கள். ஈழப்போர் மிகவும் உச்சம் தொட்ட காலத்தில் பெரியார் திடலில் மறைந்த இயக்குநர் மணிவண்ணனின் இயக்கத்தில் நாடகம் ஒன்றில் நடித்து, பணம் வசூல் செய்து ஈழத்துக்கு அனுப்பினார். கேட்காமலே உதவி செய்பவர் விஜயகாந்த். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது ஒரு விழாவிற்கு மனோரமாவை அழைக்கச் சென்று விட்டு, திரும்புகையில் ஒரு பெண்ணிடம் ஒருவர் சைனை திருடிவிட்டுச் சென்று விட்டார். உடனே அந்த திருடனைத் துரத்தி, அடித்து சைனை மீட்டுக் கொடுத்த நிஜ ஹீரோ விஜயகாந்த். இது அவரது துணிச்சலுக்கு எடுத்துக்காட்டு. மதுரையில் இருந்து ஒரு நடிகர் சங்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு ரயிலில் திரும்புகையில் அனைவருக்கும் பசி. ரயிலை நிறுத்தி அனைவருக்கும் கொத்து புரோட்டாவும் சிக்கன் கறியும் அள்ளிக்கொண்டு வந்தவர். விஜயகாந்த் நன்றாக இருந்தால் தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் நன்றாக இருக்கும்” என  நடிகர் சத்தியராஜ் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.