Captain Varun Singh: தமிழகத்தின் குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த குரூப் கேப்டன் வருண்சிங் உயிரிழந்தார்.   


 










 


கடந்த டிசம்பர் 8ம் தேதிம் குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் துணைவியார் மதுலிகா ராவத் மற்றும் உடன் பயணித்த 11 படை வீரர்களும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிர் தப்பிய, வருண் சிங்  பெங்களூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் உயிரிழந்ததாக இந்திய விமானப் படை தனது அதிகார ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. உயிர் நீத்த வருண் சிங், இந்திய விமானப்படையில் ஆற்றிய வீர தீர செயல்களுக்காக ’செளரிய சக்ரா’ விருதை பெற்றவர்.


பிரதமர் இரங்கல்: 


உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங் மறைவுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "அவர் மிகுந்த யுக்தி பூர்வமாகவும், பெருமையுடனும் தேசத்திற்கு சேவை செய்தார். உயிரிழந்த தகவலறிந்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். இவரின் உயர்ந்த சேவைகள் என்றும் மறக்க முடியாதது"என்று தெரிவித்தார். 


புதுவை துணைநிலை ஆளுநர்: 


குன்னூர்,ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் திரு.வருண் சிங் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரு.வருண் சிங்-ஐ மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு அவரது பெற்றோர்களிடம் ஆறுதல் தெரிவித்தேன்.அவர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவத்தார். 


சௌர்யா சக்ரா விருது:  


வருண் சிங் இலகுரக போர் விமானத்தில் பணியாற்றியவர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் தேஜாஸ் போர் விமானத்தில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. ஒருகட்டத்துக்கு மேல் விமானம் முழுவதுமாக கட்டுப்பாட்டை இழந்தது.



இருந்தாலும் நம்பிக்கையை இழக்காத வருண் சிங் தனது திறமையாலும், அனுபவத்தாலும் விமானத்தை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தார். அதன்பிறகு, சுமார் 10,000 அடி உயரத்தில், விமானம் மீண்டும்  மொத்த கட்டுப்பாட்டை இழந்தது.  அத்தகைய சூழ்நிலையில் இருந்தும் விமானத்தை மீட்டெடுத்த வருண் சிங் துணிச்சலாக அதனை தரையிறக்கினார்


இப்படி, தான் தொடர்ந்து சந்தித்த சிக்கலான சூழ்நிலையிலும் உயிர் சேதம், பொருள் சேதம் எதுவும் ஏற்படாமல் போர் விமானத்தை பத்திரமாகவும், துணிச்சலுடனும் தரையிறக்கிய அவருக்கு சௌர்யா சக்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


அதுமட்டுமின்றி, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ 10,000 கோடி ரூபாயில் உருவாக்கியிருக்கும் ‘ககன்யான்’ திட்டத்திற்கும் அவர் தேர்வாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வருண் சிங் தற்போது வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியின் (டிஎஸ்எஸ்சி) இயக்குநராக உள்ளார்.


12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் நீங்கள் வாழ்க்கையில் எதைச் சாதிக்க முடியும் என்பதைத் தீர்மானிக்கும் என்று நினைக்க வேண்டாம். உங்களை நம்புங்கள்... அதை நோக்கி செயல்படுங்கள்