குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த விமானி வருண் சிங் அவர் படித்த பள்ளிக்கு எழுதிய கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. 


“சாதாரண மனிதனாக இருப்பது சரி; ஆனால் அந்த எந்த வகையிலும் வரவிருக்கும் வாழ்க்கைக்கு உதவாது. உன்னுடைய குறிக்கோளை தேர்ந்தெடு. நீங்கள் எதை நோக்கி பயணித்தாலும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள்” இது கேப்டன் வருண் சிங்கின் உணர்ச்சி மிகுந்த நம்பிக்கை வரிகள். 


நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில், அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது.  ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்த நிலையில், காட்டேரி என்ற இடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த நிலையில் பல்வேறு நபர்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி, 13 பேர் உயிரிழந்தனர். 




அதில், முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி முதுலிகா ராவத், ராணுவ வீரர்கள் லிட்டெர், ஹர்ஜிந்தர் சிங், குருசேவாக் சிங், ஜிதேந்தர் குமார், விவேக் குமார், சாய் தேஜா, சாத்பால், சவுஹான், குல்தீப், பிரதீப், தாஸ் ஆகிய 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் மட்டும் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார். அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 




இந்நிலையில் கேப்டன் வருண் சிங் கடந்த செப்டம்பர் மாதம் தான் படித்த பள்ளியான ஹரியான மாநிலம் சண்டிமந்திரில் உள்ள ராணுவ பள்ளிக்கு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இப்போது அந்த கடிதம் வைரலாகி வருகிறது. 


அந்த கடிதத்தில், “நான் இப்பள்ளியின் முன்னாள் மாணவர். 2000 ஆண்டில் அங்கு படித்தேன். நான் படிக்கும்போது விங் கமெண்டர் அவ்தார் சிங் எனக்கு பள்ளி முதல்வராக இருந்தார். தற்போது இருக்கும் பள்ளி துணை முதல்வராக இருக்கும் விஜய லட்சுமி எனக்கு ஆங்கில டீச்சர். பெருமையுடனும் பணிவுடனும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். 




கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி செய்த வீரதீர செயலுக்காக ஆகஸ்ட் 15 ஆம் தேதி சௌரிய சக்ரா விருது இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டுள்ளது.  அன்றைய எனது செயல்கள் எனது ஆசிரியர்களின் சீர்ப்படுத்தல் மற்றும் வழிகாட்டுதலின் விளைவாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.  


எனது வாழ்க்கையைப் பற்றிய சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன். இது குழந்தைகளுக்கு உதவலாம்; ஊக்கமளிக்கலாம். இந்த அதீத போட்டி நிறைந்த உலகில் நான் மிகவும் சராசரி மாணவனாக இருந்தேன். 12 ஆம் வகுப்பில் முதல் குரூப்பை அரிதாகவே தேர்ந்தெடுத்தேன். 


12ஆம் வகுப்பில் நான் ஒழுக்கமுள்ள மாணவனாக இருந்தாலும் படிப்பில் சராசரியே. விளையாட்டு மற்றும் அவரது இணை பாடத்திட்ட செயல்பாடுகளில் கூட நான் சராசரி மாணவர்தான். ஆனால் என்னிடம் விமானம் மற்றும் விமானப் போக்குவரத்து மீதான ஆர்வம் இருந்தது. 


நான் எப்போதும் சராசரி மனிதனாக இருக்க வேண்டும் என்றே நினைத்தேன், சிறந்து விளங்க முயற்சிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று எண்ணினேன். ஆனால் ஒரு இளம் ஃப்ளைட் லெப்டினன்டாக ஒரு போர்க் குழுவில் பணியமர்த்தப்பட்ட பிறகு, நான் என் மனதையும் இதயத்தையும் செலுத்தினால் என்னால் நன்றாகச் செய்ய முடியும் என்பதை உணர்ந்தேன். 




அது என் வேலையிலும் சொந்த வாழ்க்கையிலும் ஒரு வித மாற்றத்தை உணர வைத்தது. ஒவ்வொரு பணியையும் எனது திறமைக்கு ஏற்றவாறு செய்யத் தீர்மானித்தேன். புதிய அணுகுமுறை பெரும் பலனைக் கொடுத்தது. 


சாதாரண மனிதனாக இருப்பது சரி; ஆனால் அந்த எந்த வகையிலும் வரவிருக்கும் வாழ்க்கைக்கு உதவாது. உன்னுடைய குறிக்கோளை தேர்ந்தெடு. நீங்கள் எதை நோக்கி பயணித்தாலும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள்.


12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் நீங்கள் வாழ்க்கையில் எதைச் சாதிக்க முடியும் என்பதைத் தீர்மானிக்கும் என்று நினைக்க வேண்டாம். உங்களை நம்புங்கள்... அதை நோக்கி செயல்படுங்கள்”எனத் தெரிவித்துள்ளார்.