தமிழ்நாடு 16-வது சட்டமன்றத்தின் முதல் பேரவைக் கூட்டத்தொடர் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தின் கடைசி நாளான நேற்று பேரவையில் இந்திய தணிக்கைக் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மோட்டார் வாகன விதிமுறைகளை மோசமாக அமல்படுத்துதல், ஓட்டுநர் உரிம சோதனைகளில் குறைபாடுகள், நெடுஞ்சாலைகளில் உள்ள குறைகளை சரிசெய்வதில் போதிய நிதி ஒதுக்கீடு மற்றும் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறைக்கு இடையிலான ஒருங்கிணைப்பு இல்லாமை ஆகியவை இந்த அறிக்கைகளில் பட்டியலிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற 77 சதவீத விபத்துக்கள் அலட்சியத்தின் காரணமாகவும், அதிக வேகமாக வாகனத்தை செலுத்தியதன் காரணமாகவும் ஏற்பட்டது என்பது அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.




ஓட்டுநர் உரிமத்திற்கான தேர்ச்சியின்போது சுமார் 60 முதல் 65 சதவீதம் வரை 2018ம் ஆண்டு ஜூன் முதல் நவம்பர் வரை தானியங்கி சோதனை தடங்களில் ஓட்டுநர் சோதனைகளில் தேர்ச்சி பெற்றனர். அதற்கு முந்தைய ஆண்டான 2017-ஆம் ஆண்டு கையேடு பரிசோதனையின்போது 93 முதல் 96 சதவீதம் பேர் வரை தேர்ச்சி பெற்றுள்ளனர். தானியங்கி சூழலில் ஓட்டுநர் சோதனைகளில் தேர்ச்சி சதவீதம் வீழ்ச்சி என்பது கையேடு சோதனை மிகவும் தரமற்றது என்பதற்கான அறிகுறி என்று சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


1992ம் ஆண்டு ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தவர்களுக்கு பரிசோதனை நேரமாக 12 நிமிடம் போக்குவரத்து ஆணையரால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2007ம் ஆண்டு மார்ச் மாதம் அது இரு சக்கர வாகனங்களுக்கு 4 நிமிடமாகவும், இலகுரக வாகனங்களுக்கு 8 நிமிடமாகவும்,  போக்குவரத்து வாகனங்களுக்கு 12 நிமிடமாகவும் குறைந்துள்ளது.




மீனம்பாக்கம் மற்றும் தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் மேற்கொண்ட நேரடி கள ஆய்வில், 29.06 நிமிடங்களில் 57 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஓட்டுநர் உரிமத்திற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுளளது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நபருக்கான பரிசோதனை நேரம் சரியாக 30 விநாடிகள் மட்டுமே என்ற அதிர்ச்சி தகவலும் சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரியவந்துள்ளது.


விண்ணப்பதாரர்களின் திறனை 30 விநாடிகளுக்குள் மதிப்பிடுவது சோதனைகளின் செயல்திறன் குறித்து சந்தேகத்தை எழுப்புகிறது என்று சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தானியங்கி சோதனை தடங்களை உருவாக்குவதில் ஏற்படுத்துவதில் அரசாங்கம் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.


நெடுஞ்சாலைத்துறை தங்களுக்கான நிதியை நெடுஞ்சாலைகளில் உள்ள குறைகளை சரிசெய்வதற்கு சரியாக பயன்படுத்தவில்லை என்றும் சி.ஏ.ஜி. தனது அறிக்கையில் சுட்டிக்காட்டிள்ளது. 2014ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறையின் தலைமைப் பொறியாளர் நெடுஞ்சாலைகளில் உள்ள இடர்பாடுகளை சரி செய்ய ரூபாய் 1,130 கோடி நிதி தேவைப்படுவதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த குறைகளை ரூபாய் 900 கோடியில் சரி செய்ய அரசு திட்டமிட்டது. இதற்காக, 2014 முதல் 2018ம் ஆண்டு வரை ரூபாய் 756 கோடியே 22 லட்சத்தை அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், அந்த நிதியிலும் ரூபாய் 457.56 கோடியை மட்டுமே அரசு பயன்படுத்தியுள்ளது.




இதேபோன்று, 2013-2018ம் ஆண்டிற்குள் சம்பவ இடத்திலே அபராதம், கூட்டுக்கட்டணம் உள்ளிட்டவைகள் மூலமாக ரூபாய் 946.19 கோடி வசூலிக்கப்பட்டது. ஆனால், இவற்றில் சாலை பாதுகாப்பு நிதிக்காக 34 சதவீதம் மட்டுமே அதாவது ரூபாய் 325 கோடி மட்டுமே அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகையிலும் ரூபாய் 165.37 கோடி மட்டுமே அரசால் பயன்படுத்தப்பட்டுள்ளது.


சி.ஏ.ஜி. அறிக்கையின்படி 2018ம் ஆண்டு 6 லட்சத்து 69 ஆயிரத்து 589 வழக்குகள் சென்னையில் போலீசாரால் வாகன ஓட்டிகள் மீது பதியப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் 2 ஆயிரத்து 986 வழக்குகளில் பதிவானர்களில் வாகன உரிமத்தை ரத்து செய்ய காவல்துறையினர் பரிந்துரைத்துள்ளனர். ஆனால், ஆர்.டி.ஓ. அலுவலர்களால் 1,628 வாகன உரிமம் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது.


நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு தணிக்கைக்கான நிறுவன கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், குறைகளை சரிசெய்யும் பணிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் சி.ஏ.ஜி. கேட்டுக்கொண்டுள்ளது.