தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று பொங்கல் பண்டிகை. தொடர் விடுமுறை என்பதால் வெளியூர்களில் படித்து வரும் மாணவர்கள், வேலை பார்த்து வரும் இளைஞர்கள் உள்ளிட்டோர் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.
வேலை நிறுத்த போராட்டம்:
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். இதற்காக பொதுமக்கள் ரயில்களை காட்டிலும் பேருந்துகளையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், அண்ணா தொழிற்சங்கம் உள்பட 23 தொழிற்சங்கங்கள் நேற்று முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், கடந்த 2 நாட்களாக வேலைக்குச் செல்பவர்கள், சொந்த காரணங்களாக பேருந்துகளில் பயணிப்பவர்கள் உள்பட பலரும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக நாளை முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் தயார் ஆவார்கள். இதற்காக ஏற்கனவே அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் முன்பதிவு நடைபெற்றுள்ளது. அரசு சார்பில் போதியளவு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று கூறினாலும் பல இடங்களில் மக்கள் மணிக்கணக்கில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் அவலம் நீடித்தது. இந்த நிலையில், நீதிமன்றத்தின் அறிவுரை, பொதுமக்கள் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரும் 19ம் தேதி வரை தற்காலிக வாபஸ் பெறுவதாக போக்குவரத்து சங்கங்கள் அறிவித்துள்ளது.
தற்காலிக வாபஸால் மக்கள் நிம்மதி:
வழக்கமாக, பொங்கல் பண்டிகையின்போது வழக்கமாக இயங்கும் பேருந்துகளை காட்டிலும் ஆயிரக்கணக்கில் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவது வழக்கம். அவ்வாறு பேருந்துகள் இயக்கப்பட்டாலுமே பல இடங்களில் பயணிகள் பேருந்துகள் கிடைக்காமல் அவதியுறும் சம்பவங்களும் அரங்கேறி வருவது நிகழ்வதுண்டு. இந்த நிலையில், ஓட்டுநர்களும், நடத்துனர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவது பயணிகளை பீதிக்குள்ளாக்கியுள்ளது.
போராட்டம் தற்போது வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தாலும், பொங்கலுக்கு எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது? என்ற தகவல் கூட இதுவரை மாநில அரசால் வெளியிடப்படவில்லை. வழக்கமாக விழா நாட்களில் பன்மடங்கு கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள், தற்போது முதலே அதிக கட்டணத்தை வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேருந்துகள் இயக்க வீதம்:
இதனால், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்து வழக்கம்போல பேருந்துகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசுறு வெளியிட்ட செய்திக்குறிப்பில் மொத்தம் இயக்கப்பட வேண்டிய 16 ஆயிரத்து 28 பேருந்துகளி்ல் 15 ஆயிரத்து 722 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், 98.09 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் 100 சதவீதம் இயக்கப்பட்டு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
தற்போது 19ம் தேதி வரை மட்டுமே போராட்டம் வாபஸ் என்று போக்குவரத்து சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அதற்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பயணிகளும், சமூக ஆர்வலர்களும் அறிவுறுத்தியுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த அறிவிப்பை தற்காலிக வாபஸ் பெற்றுள்ளதால், இன்று மாலை அல்லது நாளை சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: TN Bus Strike: போக்குவரத்து பணியாளர்கள் ஸ்ட்ரைக் - எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பேருந்துகள் இயக்கம்! முழு விபரம்
மேலும் படிக்க: TN Bus Strike: பொங்கல் பண்டிகை வருது.. ஸ்டிரைக் எல்லாம் தேவையா? - போக்குவரத்து ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!