தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை விடுவிப்பு, பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கிய வேலை நிறுத்தம் இன்று 2வது நாளாக தொடர்கிறது. கோரிக்கைகள் தொடர்பாக அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. தொழிற்சங்கங்கள் சொன்ன 6 கோரிக்கைகள் 2 கோரிக்கைகளை மட்டுமே தற்போதைக்கு பரீசிலிக்க முடியும். மற்ற கோரிக்கைகளை பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் பேசிக்கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அது ஏற்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடங்கியது.
இதனால் தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் ஓடுமா என்ற கேள்வி மக்களுக்கு எழுந்தது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொமுச மற்றும் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை. இதனால் அந்த சங்க ஊழியர்களை கொண்டும், தற்காலிக பேருந்து ஓட்டுநர்களை கொண்டும் மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டது. தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சென்னை கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நேரம் தான் கேட்கிறோம். இது பொங்கல் நேரம் என்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க வேண்டும். இந்த நேரத்தில் போராட்டம் என்பது பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரக்கூடியது. தொழிலாளர்களுக்கு என்றும் திமுக உறுதுணையாக இருக்கும். போராடுவது உங்கள் உரிமை என்றாலும் பொதுமக்களுக்கு இடைஞ்சல் தர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்துக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் தெரிவித்தனர். ஆனால் ஆனால் உயர்நீதிமன்ற பதிவுத்துறையில் மூத்த வழக்கறிஞர் பட்டாபி ராமன் வழக்கை தாக்கல் செய்ய தாமதம் ஆனதால் இன்று காலை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது தேவையற்றது. ஆனால் போராட்டம் நடத்த உரிமையுள்ளது” என கூறினர். தமிழ்நாட்டின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கலின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அப்போது, ‘பேச்சுவார்த்தை முற்றுபெறாத நிலையில் சட்டவிரோதமாக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, ‘முன்னரே முறையாக நோட்டீஸ் கொடுத்துவிட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்’ என தொழிற்சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அரசும், போக்குவரத்து சங்கமும் ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரிக்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து பிற்பகலில் அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் படிக்க: TN Bus Strike: “போராடுவது உங்கள் உரிமை.. மக்களுக்கு இடைஞ்சல் வேண்டாம்” - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்