மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டிற்கு கலவையான வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 


மத்திய பட்ஜெட்:


"மத்திய நிதி அமைச்சர் இன்று 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். அதன் முன்னெடுப்பாக நேற்று, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த 2023-2024ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையில், நடப்பு நிதி ஆண்டில் 6.5 முதல் 7 சதவீதம் வரை நிலையான விலை விகிதப்படி பொருளாதார வளர்ச்சி விகிதம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, சென்ற ஆண்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதத்தைவிட குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


பொருளாதார ஆய்வு அறிக்கையின்படி வேலை வாய்ப்பை உருவாக்குதல், திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தல், வேளாண்துறை மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு ( ஏஐ) மூலம் தொய்வடைந்துள்ள தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் ஒருசில அம்சங்கள் உள்ளன.


விவசாயிகளுக்கு நன்மை கிடையாது:


விவசாயத் துறை மேம்பாட்டுக்கு, பருவ நிலை மாற்றத்தை கருத்திற்கொண்டு உற்பத்தித் திறனை பெருக்கும்
ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் சுய சார்பு நிலையை எட்டுதல், காய்கறி உற்பத்தியை நகர்ப்புற பகுதிக்கு அருகாமையில் பயிரிடுவதை ஊக்குவித்தல், விவசாய உற்பத்திக் குழுக்களை ஊக்குவித்தல் என்று ஒருசில அம்சங்கள் உள்ளன.


எனினும், விவசாயிகள் இன்று உற்பத்தி செய்த பொருளை சந்தைப்படுத்துவதில் பெரும் சிரமத்தை தொடர்ந்து
சந்தித்து வருகின்றனர். இதற்கு அரசு கொள்முதல் உள்ளிட்ட சந்தை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், உணவுப்
பொருட்கள் பதப்படுத்துதல் தொழில், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல் போன்றவற்றை
பெருமளவில் ஊக்கப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, தற்போதைய அறிவிப்புகள் மூலம் விவசாயிகள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்காது.


சிறு, குறு தொழில் கடனுதவி:


அடுத்ததாக, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குதல் மற்றும் அவர்களை தொழில் துறையில் தேவைப்படும் வேலைவாய்ப்புகளுக்கு தயார்படுத்துதல் போன்றவற்றில் ஒருசில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. உதாரணமாக, பணியாளர் வருங்கால வைப்புநிதி அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் முதன் முதலில் வேலைவாய்ப்பை பெறுபவர்களுக்கு ஓராண்டுக்கு ஊக்கத் தொகையையும்,
அந்த வேலைவாய்ப்பை வழங்கும் தொழில் முனைவோருக்கு ஊக்கத் தொகையையும் வழங்குவது சிறு குறு
தொழில்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.


இதுதவிர, திறன் மேம்பாட்டிற்கான முயற்சிகள், சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்குவதில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், கள அளவில் இந்த உதவிகளைப் பெறுவதில் பல சிரமங்கள் உள்ளன. எனவே, திறன் பயிற்சி வழங்குவதிலும், சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்குவதிலும் உள்ள செயல்முறை ரீதியிலானபிரச்சனைகளைத் தீர்க்க வழிவகை காண வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.


தமிழ்நாட்டிற்கு பாரபட்சம்:


பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதியின் பெரும் பகுதி தற்போது ஆட்சியிலுள்ள அரசின் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யும் பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு தொழில் வழிப்பாதை, சாலை
கட்டமைப்பு மேம்பாடு, புது விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள், புதிய மின் திட்டங்கள், ஆந்திர
பிரதேசத்திற்கு புதிய தலைநகருக்கான திட்டம், நீர் ஆதார திட்டங்கள் என பல திட்டங்களுக்கு குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் சலுகைகளை வழங்கியிருப்பது, மத்திய அரசின் பாரபட்சமான நிலையைக் காட்டுகிறது.


கோதாவரி-காவிரி இணைப்பு போன்ற திட்டங்கள் தமிழகத்தினால் முன்மொழிந்த போதிலும், மத்திய அரசு
இதனை கண்டுகொள்ளாமல் விட்டது, தமிழக விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.
அதேபோல், இதே மத்திய அரசு அறிவித்த ஓசூர், கோயம்புத்தூர் பாதுகாப்பு தளவாடங்கள் தொழில்வழி
திட்டமும் அறிவிப்பு செய்ததோடு கிடப்பில் போடப்பட்டுள்ளதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
அதேபோல், நடந்தாய் வாழி காவிரி திட்டம் (காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டம்) பற்றி ஜனாதிபதி
அறிவிப்பில் அறிவித்ததோடு, இத்திட்டத்திற்கு தேவையான நிதியினை ஒதுக்காமல் தமிழகத்திற்கு மத்திய
அரசு பாரபட்சம் காட்டியுள்ளது.


வெள்ளத் தடுப்பு பணிகளுக்கும் பீகார், அஸ்ஸாம், ஹிமாச்சல் பிரதேஷ், உத்திரகாண்ட், சிக்கிம் போன்ற
மாநிலங்களுக்கே பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்கள் எதுவும் தமிழகத்திற்கு
அறிவிக்கப்படாதது ஒரு பெருத்த ஏமாற்றமாகும். எப்போதும் செயல்படுத்துகிற ஊரக வளர்ச்சி திட்டங்கள், நகர்புற மேம்பாட்டு திட்டங்கள் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. பல அறிவிப்புகள் வரி சீர்திருத்தம் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது.


பெருத்த ஏமாற்றமே:


இவையெல்லாம் செயல்படுத்தி எந்த அளவுக்கு வரி விதிப்பு முறைகள் எளிமைப்படுத்தப்படும் என்பதையும், அதனால் வரி செலுத்துவோரின் சிரமங்கள் குறைகிறதா என்பதையும் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த தருணத்தில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை கொண்டு வந்த பின்பும், தொழில் முனைவோர் பல்வேறு நடைமுறை சிரமங்களைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
வரி விதிப்பைப் பொறுத்தவரை, சுங்க வரி விதிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் உள்நாட்டு
உற்பத்தித் திறனும், போட்டியிடும் திறனும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க
ஒன்றுதான்.


எனினும் நேரடி வரி விதிப்பில், புதிய வரி விதிப்பு முறையைப் பின்பற்றுவோருக்கு மட்டும் ஆண்டுக்கு
ரூ. 17,500 சேமிக்கக்கூடிய அளவில் வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது இன்றைய
சூழ்நிலையில் போதுமானதாக இல்லை என்பது என்னுடைய கருத்து. இதனால் வரி விதிப்பில் மாற்றம்
வரும் என்று எதிர்பார்த்திருந்த பொதுமக்கள் மத்தியில் இது ஒரு பெருத்த ஏமாற்றமே. இதுதவிர, பங்குச் சந்தை வரிவிதிப்பு முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.


பொருளாதார வளர்ச்சி இல்லை:


பொதுவாக, கார்ப்பரேட்டுகள் அதிக லாபம் ஈட்டுகின்றனர் என்று பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தும் அந்த அதிக லாபத்தை, வேலைவாய்ப்பு உருவாக்குவதில் அவர்கள் இதுவரை
பயன்படுத்தவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை ஊக்குவிப்பதற்கான எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. எனவே, தனியார் துறை மூலம் அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவது என்பது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை.


மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க-வின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் அளித்த பல வாக்குறுதிகள்
இந்த வரவு, செலவுத் திட்ட அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை
அளித்துள்ளது. இந்த வரவு, செலவு அறிக்கையில் முதியவர்களுக்கான எந்த சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை. முதியோர்களுக்கு கொரோனா காலத்திற்கு முன்பு நடைமுறையில் இருந்த சலுகைகளையாவது திரும்ப அளித்திருக்கலாம். எனவே, இந்த வரவு, செலவு அறிக்கை வடமாநிலங்களையும், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது இல்லை.


காழ்ப்புணர்ச்சி:


குறிப்பாக தமிழகத்திற்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது, தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது. தமிழகத்திற்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு வாக்களித்து, 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழக மக்கள் வெற்றிபெறச் செய்தார்கள். திமுக-கூட்டணிக் கட்சிகளுக்கு 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் பெற்றுத் தராதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் 2019 முதல் 2024-ஆம் ஆண்டுவரை தமிழகத்தின் நன்மைக்காக எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் இருந்தது போல், அமைதியாக
காலம் தள்ளுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்."


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.