வேலூர் மாவட்டம் குடியாத்ததை சேர்ந்த ஆசிரியர் சுகுமார். இவர், கொலை செய்யப்பட்ட வழக்கில் குடியாத்தம் தாலுக்கா காவல் நிலையத்தில், கடந்த (01.10. 2013)-ம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக குடியாத்தம் பகுதியை சேர்ந்த முன்னாள் மத்திய பாதுகாப்பு படை வீரர் கோபி (எ) கோபால் வயது (43) என்பவரை கைது செய்து அவரை பக்கத்து காவல் நிலையமான மேல்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளனர். அப்போது, மேல்பட்டி காவல் நிலையத்திற்கு உள்ளேயே கோபி (எ) கோபால் (லாக்கப் டெத்) உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி சுமலதா கணவர் மரணம் குறித்து புகார் அளித்த நிலையில் உள்ளூர் காவல் துறை விசாரணைக்கு பின் இவ்வழக்கை 2017-ம் ஆண்டு முதல் வேலூர் சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டு, வழக்கு விசாரணை வேலூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.


விசாரணை கைதி லாக்காப் மரணத்தில் போலீசார் 3 பேருக்கு 7 வருட சிறை 


இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் காவல் மரணம் தொடர்பாக அப்போதைய குடியாத்தம் தாலுக்கா காவல் நிலைய காவல் ஆய்வாளர் முரளிதரன், முதன்மை காவலர் உமா சந்திரன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும் தலா ஒரு லட்சத்தி 70 ஆயிரம் அபராதமும், ஓய்வுபெற்ற துணை ஆய்வாளர் இன்பரசனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சத்தி 60 ஆயிரம் அபராதமும் விதித்து வேலூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி முனைவர் முருகன் உத்தரவிட்டார். தற்போது ஆய்வாளர் முரளிதரன் வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல் ஆய்வாளராகவும், தலைமை காவலர் உமாசந்திரன் பரதராமி காவல் நிலையத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மூன்று பேரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


மூன்று பேரையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர் 


அதனைத் தொடர்ந்து 3 பேரை சிறைக்கு அழைத்து செல்லும்போது, தலைமை காவலர் உமாசந்திரன், ஓய்வு பெற்ற துணை ஆய்வாளர் இன்பரசன் ஆகிய இருவரை சிறிது நேர இடைவேளை விட்டு கழிவறைக்கு செல்வதாக கூறி ஒருவர் பின் ஒருவராக காவல் துறையினர் அழைத்து சென்றனர். பின்னர் காவல் ஆய்வாளர் முரளிதரனை மற்றொரு வாயில் வழியாக அழைத்து சென்றனர். ஆனால் அங்கும் வண்டியில் ஏற்றாமல் வண்டியை மட்டும் ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு காவல் ஆய்வாளர் வேறு ஒருவழியாக போய் நீதிமன்ற வளாகத்தில் தனியாக நின்று கொண்டிருந்தார். பின்னர் அவரிடத்திற்கு சென்று காவல் துறையினர் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.