BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்று, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.


ஆம்ஸ்ட்ராங் படுகொலை:


பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி மாலை 6 பேர் கொண்ட கும்பலால் சென்னை பெரம்பூர் பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டார். படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் ஏராளமானோர் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர்.


11 பேர் கைது:


அதேநேரம், படுகொலை நிகழ்த்தப்பட்ட நாளன்றே ஆம்ஸ்ட்ராங்கை தாங்கள் தான் கொன்றதாக, 8 பேர் போலீசில் சரணடந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், ரவுடி ஆற்காடு சுரேஷ் கடந்த ஆண்டு கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, முதலில் சரணடைந்த 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 


மாயாவதி நேரில் அஞ்சலி:


மருத்துவமனையில் இருந்து அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டிற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் பெரம்பூரில் உள்ள அரசுப்பள்ளியில் வைக்கப்பட்டது. அங்கு பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இயக்குனர்கள் வெற்றி மாறன், பா. ரஞ்சித் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.


பெரம்பூரில் அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு:


ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திலேயே அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய முடியாது என மாநகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதன் காரணமாக இந்த விவகாரம் குறித்து உயர்நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் குடும்பம் முறையிட்டது. அதனை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பொத்தூரில் அடக்கம் செய்ய உத்தரவிட்டது. மேலும், அரசின் அனுமதி பெற்று பெரம்பூர் கட்சி இடத்தில் நினைவிடம் அமைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.






நல்லடக்கம் செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல்:


நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் உடல்,  பொத்தூரில் உள்ள ரோஜா நகருக்கு வாகனத்தில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று ஆம்ஸ்ட்ராங்கிற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். புத்த மத வழக்கப்படி ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு, மரப்பேழையில் வைத்து குழிக்குள் இறக்கி அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அங்கு திரண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரும், ஆதரவாளர்களுகும் உடைந்து கதறி அழுதது நெஞ்சை உலுக்கியது.