சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபல கல்வி நிறுவனமான ஜேப்பியார் கல்வி குழுமங்களால் செம்மஞ்சேரி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.2000 கோடி மதிப்புள்ள 91 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 

 

வருவாய்த் துறை பதிவேடுகளில்,"அரசு மானாவாரி தரிசு" என வகைப்படுத்தப்பட்ட இந்த  நிலத்தை ஜேப்பியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்தாக தமிழ்நாடு வருவாய்த் தெரிவித்தது.  இதையொட்டி, இந்நிலத்தை நீண்ட கால குத்தகைக்கோ, அல்லது விலைக்கு வாங்கவோ அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 1996ம் ஆண்டு அறக்கட்டளை தமிழ்நாடு வருவாய்த்துறையை அணுகியது. 



 

இதுவொரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்றும், நிலம் தேவைப்படும் கட்டாயத்தில் அரசு இருப்பதாகவும் கூறி இந்த கோரிக்கையை 2003ம் ஆண்டில், அறக்கட்டளையின் கோரிக்கையை வருவாய்த் துறை நிராகரித்தது. விரைவில், தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம் 1905, பிரிவு 6(2) ன் கீழ் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை அப்போதைய ஒருங்கிணைந்த காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அதிகாரிகள் மேற்கொண்டனர். அரசின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து, அறக்கட்டளை உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரனையில், ஜேப்பியார் கல்வி குழும் ஆக்கீரமிப்பாளர் என்பதை 2011ல் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இருந்தாலும், ஆக்கிரமிப்பு அகற்றம் செய்வதற்கு முன், தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம் 1905, பிரிவு 7ன் கீழ்  ஆக்கீரமிப்பாளர் உரிய நோட்டிஸ் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.  இதன் கீழ், கல்வி குழுமம் தனது விளக்கத்தை தெரிவிக்கலாம் என்றும், அதன் அடிப்படையில்  தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையொட்டி, கல்வி குழுமம் அளித்த விளக்கத்தின் அடிப்படையில், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்,  2011 டிசம்பர் மாதம் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்வதற்கு உத்தரவிட்டார். 

 



 

2012 ஜனவரி மாதம், இந்த உத்தரவை எதிர்த்து, கல்வி குழுமம் நில நிர்வாக ஆணையரிடம் மறுசீராய்வு மனு மூலம் மேல்முறையீடு செய்தது.  இது சீராய்வு மனு நிலுவையில் இருந்தபோது, நில உரிமையை  மாற்றக் கோரி, தாம்பரத்தில் உள்ள மாவட்ட சார்நிலை நீதிமன்றத்தை அணுகியது. 2014 ல், இந்த வழக்கை விசாரித்த சார்நிலை நீதிபதி கல்வி குழுமத்துக்கு  ஆதரவாக தீர்ப்பளித்தார்.


இந்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு தாக்கல் செய்தது. இருந்தாலும், கடந்த ஆறு ஆண்டுகளாக வழக்கில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. 2020ல் நில நிர்வாக ஆணையர் மேற்கொண்ட அதிதீவிர முயற்சியால் வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 


இந்நிலையில், கடந்த செப்டம்பர் 1ம் தேதி மாவட்ட சார்நிலை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி ரத்து செய்தார். இதனையடுத்து, நில நிர்வாக ஆணையர் 91 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.