குற்ற வழக்குகளை எதிர்கொள்வதால் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் வகித்து வரும் அமைச்சரவை இலாகாக்கள் வேறு அமைச்சருக்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியானது.
முதலமைச்சரின் பரிந்துரை:
அதை உறுதி செய்யும் வகையில், செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரத்துறையை நிதித்துறையை வகித்து வரும் தங்கம் தென்னரசுக்கும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சரான முத்துசாமிக்கும் ஒதுக்க முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பரிந்துரை செய்தார். அதே சமயத்தில், இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதியதாக திமுகவின் மூத்த தலைவரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி நேற்று தெரிவித்தார்.
ஆளுநர் ரவி மறுப்பு:
இந்நிலையில், முதலமைச்சர் பரிந்துரையை ஏற்று தங்கம் தென்னரசுக்கு மின்சாரத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கவும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இருப்பினும், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டும் என்பதை ஆளுநர் ஒப்பு கொள்ளவில்லை. குற்ற வழக்குகளை எதிர்கொள்வதாலும் நீதிமன்ற காவலில் இருப்பதாலும் அவர் அமைச்சராக தொடர ஆளுநர் ஒப்பு கொள்ளவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையால் கடந்த செவ்வாய் இரவு கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூராரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பெற்று வரும்போது, அமைச்சரின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அதேநேரம் அமைச்சர் சார்பில் ஜாமின் கோரியும், அவரை விசாரணைக் காவலில் எடுக்க அனுமதி கோரி அமலாக்கத்துறையும் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
ஆட்கொண்ர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியை, உயர்சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கியது. அமலாக்கத்துறையின் மருத்துவக் குழுவும் காவேரி மருத்துவமனைக்கு சென்று அமைச்சரின் உடல்நிலையை ஆராயலாம் எனத் தெரிவித்தது.
காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி:
அரசு மருத்துவமனையில் கொடுத்த அறிக்கையை நம்ப முடியாது என்பதையும், காவலில் இருப்பவர்கள் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கையையும் நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். தொடர்ந்து, வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜுன் 22ம் தேதிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேநேரம், வரும் 28ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் நீடிப்பார், அவரது உடல்நிலையை அமலாக்கத்துறை ஏற்பாடு செய்யும் மருத்துவக் குழுவும் ஆராயலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செந்தில்பாலாஜி மாற்றப்பட்டுள்ளார்.