அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கண்காணிக்க 5 எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட குழு இன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அமைச்சரின் உடல்நிலையை ஆய்வு செய்து, அமலாக்கத்துறைக்கு அறிக்கை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்ட குழுவில் இருதய சிகிச்சை நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். 


காவேரி மருத்துவமனை மருத்துவர்களுக்கு உதவ இருக்கும் எய்ம்ஸ் குழு:


செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தரும் காவேரி மருத்துவமனை மருத்துவர்களுக்கு எய்ம்ஸ் குழு உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு, 2 அல்லது 3 நாட்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


அமலாக்கத்துறையால் கடந்த செவ்வாய் இரவு கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூராரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பெற்று வரும்போது, அமைச்சரின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். 


அதேநேரம் அமைச்சர் சார்பில் ஜாமின் கோரியும், அவரை விசாரணைக் காவலில் எடுக்க அனுமதி கோரி அமலாக்கத்துறையும் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.


ஆட்கொண்ர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியை, உயர்சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கியது. அமலாக்கத்துறையின் மருத்துவக் குழுவும் காவேரி மருத்துவமனைக்கு சென்று அமைச்சரின் உடல்நிலையை ஆராயலாம் எனத் தெரிவித்தது. 


காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி:


அரசு மருத்துவமனையில் கொடுத்த அறிக்கையை நம்ப முடியாது என்பதையும், காவலில் இருப்பவர்கள் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கையையும் நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். தொடர்ந்து, வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜுன் 22ம் தேதிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


அதேநேரம், வரும் 28ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் நீடிப்பார், அவரது உடல்நிலையை அமலாக்கத்துறை ஏற்பாடு செய்யும் மருத்துவக் குழுவும் ஆராயலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செந்தில்பாலாஜி மாற்றப்பட்டார். 


இதையடுத்து, ஜாமின் மற்றும் கஸ்டடி கோரிய மனுக்கள் மீதான விசாரணையை நடத்திய, மாவட்ட முதன்மை நீதிமன்றம் அதன் மீதான தீர்ப்பை இன்று வழங்க உள்ளது.


செந்தில் பாலாஜியின் கைது தமிழ்நாடு மட்டும் இன்றி தேசிய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் மத்திய புலனாய்வு அமைப்பு இதுவரை சிட்டிங் அமைச்சரை கைது செய்ததே இல்லை. தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை செந்தில் பாலாஜி கைதை கடுமையாக கண்டித்துள்ளன.