காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
திட்டத்தின் நோக்கம் என்ன ?
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, சென்னை மண்டலம், காஞ்சிபுரம் (தெற்கு) மாவட்டத்தில் உள்ள 80 டாஸ்மாக் மதுபானக் கடைகளில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. மதுபானம் வாங்கும் வாடிக்கையாளர்கள், ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக ₹10 செலுத்தி மதுபானத்தைப் பெற்றுச் செல்ல வேண்டும். மது அருந்திய பின், காலி பாட்டில்களை அதே கடையில் திரும்ப ஒப்படைக்கும்போது, அவர்கள் செலுத்திய ₹10 திருப்பி வழங்கப்படும்.
மதுபானப் பிரியர்கள் காலி பாட்டில்களைப் பொது இடங்களில் வீசிச் செல்வதைத் தவிர்த்து, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் பணியாளர்களின் எதிர்ப்பு
அரசு மதுபானக் கடைகளில் இந்தத் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில், டாஸ்மாக் பணியாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே அதிக அளவு பனிச்சுமை இருப்பதால், இந்த திட்டம் மேலும் பணி சுமையை கொடுக்கும் என ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்களின் கோரிக்கை என்ன ?
காஞ்சிபுரத்தில் உள்ள ஓரிக்கை டாஸ்மாக் குடோன் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் திரண்டு, காலி பாட்டில்களை மதுபானப் பிரியர்களிடம் இருந்து வாங்க மாட்டோம் என முழக்கமிட்டுள்ளனர்.
திடீரென அமல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம், தங்களது பணிச்சுமையையும், சிரமத்தையும் அதிகரிக்கும் என்று பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் பணியாளர்களின் இந்த எதிர்ப்பு, இத்திட்டத்தின் செயல்பாட்டில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து டாஸ்மார்க் சங்க மாநில நிர்வாகி மணிகண்டன் கூறுகையில், ஏற்கனவே டாஸ்மார்க் கடைகள் இடம் பற்றாக்குறை மற்றும் ஆட்கள் பற்றாக்குடையுடன் இயங்கி வருகிறது. ஏற்கனவே பல மணி நேரம் மன உளைச்சலில் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் யாரோ ஒருவர் குடித்து கொடுக்கும் எச்சில் பாட்டில்கள், வாந்தி எடுத்துவிட்டு அதிலிருந்து எடுத்துக் கொடுக்கும் பாட்டில்களை வாங்க சொல்வது தவறு என தெரிவித்தார். இந்த திட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் என வற்புறுத்தினால் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என எச்சரித்தார்.
மது பிரியர்கள் கூறுவது என்ன?
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மதுப் பெரியவர்கள் கூறுகையில், பாட்டில்களை எப்படி பத்திரமாக வைத்து மீண்டும் கொடுப்பது என தெரியவில்லை. ஒரு சிலர் டாஸ்மாக்கில் பாட்டில் வாங்கியவுடன், பிளாஸ்டிக் வாட்டர் கேனில் மதுவை நிரப்பிவிட்டு அப்போதே பாட்டிலை கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுச் செல்வதாக தெரிவித்தனர்
டாஸ்மார்க் நிர்வாகம் எடுத்த நடவடிக்கை என்ன ?
சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருவதாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டாஸ்மாக் நிர்வாக ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கவும், நடைமுறை பிரச்சனைகளை சரி செய்வது குறித்து ஆராயவும் மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அந்த பாதிப்புகளை எப்படி சரி செய்வது குறித்து, ஆராய்ந்து அறிக்கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.