பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என். ரவியை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். அப்போது, கிருஷ்ணகிரியில்  ராணுவ வீரர் பிரபு என்பவர், திமுகவை சேர்ந்த பிரமுகரால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக புகாளித்துள்ளார்.


அண்ணாமலை டிவீட்:


இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”நாட்டின் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பாஜக மாநில தலைவர்களுடன் சேர்ந்து சென்று, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, மாநிலத்தில் சட்ட- ஒழுங்கு சீர்குலைந்துள்ள சமீபத்திய குறைபாடுகள் குறித்து ஒரு மனுவைச் சமர்ப்பித்தோம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரினோம்” என குறிப்பிட்டுள்ளார்.






கிருஷ்ணகிரி சம்பவம்:


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த 33 வயதான பிரபு, கடந்த 8ம் தேதி தனது வீட்டின் அருகே இருந்த குடிநீர் தொட்டி அருகே துணி துவைத்துக் கொண்டிருந்தார். இதை கண்டித்த திமுக கவுன்சிலர் சின்னசாமிக்கும், பிரபுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சின்னசாமி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, பிரபுவின் வீட்டிற்கு சென்று அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.


இதில் படுகாயமடைந்த பிரபு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரம் தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரின் பேரில் சின்னசாமி மற்றும் அவரது மகன் ராஜபாண்டி உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அதேநேரம், இந்த கொலையில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும், தனிப்பட்ட மோதல் காரணமாகவே இந்த சம்பவம் நேர்ந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், ராணுவ வீரர் கொல்லப்பட்டது, திருவண்ணாமலை ஏ.டி.எம்மில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது போன்ற சம்பவங்களால், தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக, ஆளுநர் ஆர்.என். ரவியிடம், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை புகாரளித்துள்ளார்.