பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த 9 ஆண்டுகள் பாஜக செய்த சாதனையை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்கிறார். இந்த நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரத்தில் தொங்கி வைக்கிறார். இதற்காக அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 4 மணி அளவில் தமிழ்நாடு வருகை தருகிறார். இந்த நடைப்பயணம் 168 நாட்கள் நடைபெறும் எனவும், இதில் 1700 கிமீ தூரம் பயணம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவின் சாதனையை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படுவதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் இதற்காக சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொண்டார். அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ என் மன், என் மக்கள் – மோடியின் தமிழ் முழக்கம் என்ற பெயரில் இந்த நடைப்பயணம் நடைப்பெறுகிறது. தமிழ்நாட்டில் 5 பகுதியாக நடக்கும் இந்த நடைப்பயணத்தில் 234 தொகுதிகளுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டு மீண்டும் பா.ஜ.க ஆட்சியில் அமர வேண்டும். இன்று தொடக்க விழா மட்டுமே நடைபெறுகிறது. 168 நாட்கள் நடைபெறும் பாத யாத்திரையில் 10 இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடியின் சாதனை குறித்த விளக்கப்புத்தகம் வெளியிடப்படும். ஒவ்வொரு இடத்திலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பார்கள். 29-ஆம் தேதி ராமநாதபுரத்தில் இருந்து இந்த நடைப்பயணம் தொடங்கும். 1700 கிமீ தொலைவும், 234 தொகுதிகளையும் கால்நடையாக சென்று மக்களை சந்திக்க உள்ளோம். கூட்டணி கட்சி தலைவர்கள் சார்பாக கட்சி பிரமுகர்கள் பங்கேற்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “திமுக கோப்புகள் 2 தொடர்பாக, ஆளுநரிடம் வீடியோ ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ளது. 6 அமைச்சர்கள் மற்றும் பினாமிகள் தொடர்பான அனைத்து ஆதாரத்தை ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக ஆட்சியில் ஊழல் இருக்கிறது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இதற்கு இனி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அமைச்சர்கள் மீது நாங்கள் வைத்த குற்றச்சாட்டுகள் பொய் என அவர்கள் நிரூபிக்கட்டும்.
ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டத்தில் இருந்து ஒரு நாளும் பின் வாங்க மாட்டோம்” என பேசியுள்ளார். மேலும் மணிப்பூர் அமைதி நிலையை நோக்கி திரும்புவதாகவும் கூறியுள்ளார். இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்துகொள்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வது குறித்து உறுதியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..