தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 159 இடங்களில் வெற்றி பெற்று திமுக கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர், பாதுகாப்பு துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் பிற மாநில முதல்வர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டு பாஜக தலைவர் எல்.முருகன் தனது வாழ்த்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “முதலமைச்சராக பதவி ஏற்கும் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான ஆதரவை பெற்று திமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்தப் பதிவில் தமிழ்நாடு பாஜக சார்பில் ஒரு வாழ்த்து அறிக்கையும் பதிவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு, தமிழ் மக்களின் உயர்விற்கு தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாஜக கட்சியின் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் எல்.முருகன் திமுக வேட்பாளர் கயல்விழியிடம் 1393 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மேலும் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாஜகவின் 4 எம்.எல்.ஏக்கள் இடம்பெற உள்ளனர். இதனால் அக்கட்சியினர் பெரும் உற்சாகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.