நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்த தேர்வால் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத அவல நிலை ஏற்பட்டது. நீட் தேர்வு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலினால் தமிழ்நாட்டில் இதுவரை 13-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


தி.மு.க.வினர் தங்களது தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்து இருந்தனர். தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், கடந்த ஜூன் மாதம், தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டார்.இந்த குழு, ‘நீட் தேர்வின்' பாதிப்புகள் பற்றி மக்களிடம் கருத்துகளை கேட்டது. இதில், 25000க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டிருப்பதாகவும் பெரும்பாலான மனுக்கள் நீட் தேர்வுக்கு எதிரானதாக இருப்பதாகவும் ஏ.கே.ராஜன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.



இதற்கிடையே அரசு அமைத்திருக்கும் ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். நீட் விவகாரத்தில் மாநில அரசு அரசியலாக்கி மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பை உறுதி செய்ய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடும் உள்ளதாகவும் நீட் குறித்து தெளிவான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள நிலையில் தமிழக அரசு எடுத்துள்ள நிலைப்பாடு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜனின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.






சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணை இன்று மேற்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழு, தமிழ்நாடு அரசு ஏ.கே ராஜன் நீட் குழுவை அமைத்தது உச்சநீதிமன்ற தீர்புக்கு எதிரானது அல்ல என தெரிவித்துள்ளது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு குறித்த பாதிப்புகளை ஆய்வு செய்தால்தான் உச்சநீதிமன்றத்தில் அது குறித்த தரவுகளை தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளது. இறுதியில், ஏ.கே ராஜன் நீட் குழுவுக்கு எதிராக பாஜக கரு.நாகராஜன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.