டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியான நிலையில், அது தொடர்பாக இன்று பாஜகவினர் முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில், பல்வேறு இடங்களில் நடக்க இருந்த போராட்டங்கள் தொடர்பாக, அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அறிக்கை
தமிழகத்தில், அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில், ரூ.1000 கோடி அளவிற்கு ஊழல் மற்றும் முறைகேடுகள் நடத்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. இது தொடர்பாக, கடந்த 6-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்ற சோதனைகளில், மது ஆலைகளும், பாட்டில் நிறுவனங்களும் சேர்ந்து ரூ.1000 கோடி கணக்கில் வராத பணத்தை ஒதுக்கியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்திடமிருந்து கூடுதலாக ஆர்டரை பெறுவதற்கு லஞ்சம் வழங்க இந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபோக, போக்குவரத்து ஒப்பந்தம், பார் ஒதுக்கீடு, மது பாட்டில்களுக்கு ரூ.30 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது, பணியாளர்களின் பணியிட மாற்றத்திற்கு லஞ்சம் பெற்றது என பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் சட்டப்படி குற்றம் என்றும், கருப்புப்பண மாற்ற தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
பாஜக போராட்டம்.. டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிட முயற்சி - கைது
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவிற்கு மெகா ஊழல் நடந்ததாக எழுந்துள்ள புகாரையடுத்து, இன்று டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பாஜக முடிவு செய்திருந்தது. அதன்படி, இன்று காலை, பல்வேறு பகுதிகளிலிருந்து டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்திருக்கு எழும்பூர் பகுதிக்கு செல்ல முயன்ற பாஜகவிரும், டாஸ்மாக் தலைமையகம் முன்பு குவிய முயற்சித்த பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காலையில் எழும்பூர் புறப்பட இருந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை அவரது வீட்டில் வைத்தே காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல், பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வமும் கைது செய்யப்பட்டார. பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் எச். ராஜா ஆகியோர் வீடுகளின் அருகேயும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தனது கானத்தூர் வீட்டிலிருந்து எழும்பூருக்கு புறப்பட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை, செல்லும் வழியிலேயே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோல், சென்னையில் 4 பகுதிகளில் போராட்டம் நடத்த திரண்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.