சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை பதவியிலிருந்து நீக்கக்கோரி, கடந்த ஜனவரி மாதம் அதிமுக கொண்டுவந்த தீர்மானத்தின் மீது, சட்டப்பேரவையில் இன்று தொடங்கி நடைபெறும் பட்ஜெட் மீதான விவாதத்தின்போதே விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அப்பாவுவை பதவி நீக்கம் செய்யக்கோரி அதிமுக கொண்டுவந்த தீர்மானம்
கடந்த 4 ஆண்டுகளாக, சட்டப்பேரவை சபாநாயகராக ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வான அப்பாவு பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், பேரவையில் பாரபட்சமாக செயல்படுவதாகக் கூறி, சபாநாயகர் அப்பாவுவை பதவி நீக்கம் செய்யக்கோரி, எதிர்க்கட்சி துணைத் தலைவரான அதிமுகவின் ஆர்.பி. உதயகுமார், கடந்த ஜனவரி மாதத்தில் பேரவை செயலாளரிடம் தீர்மானத்தை வழங்கியுள்ளார். அதில், சட்டப்பேரவையில் அதிமுகவினரை அதிக நேரம் பேச அப்பாவு அனுமதிப்பதில்லை என்றும், அதிமுகவினர் பேசும்போது ஒளிபரப்பு துண்டிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார் ஆர்.பி. உதயகுமார்.
இந்த நிலையில், பேரவை தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது, இன்று(17.03.25) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று, முன்னதாக நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்குப்பின், சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். அந்த வகையில், சட்டப்பேரவையில் இன்று, அந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
வாக்கெடுப்பு எப்படி நடைபெறும்.?
இன்று காலை பேரவை நிகழ்வுகள் தொடங்கிய உடன், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெறும். அது முடிந்த உடன், நேரமில்லா நேரம் இடம்பெறும். அப்போது, தான் கொடுத்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தவோ, அல்லது அதற்கான நேரத்தை ஒதுக்கவோ ஆர்.பி. உதயகுமார் கோரலாம்.
அப்போது, தீர்மானம் உடனடியாக வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், சபாநாயகர் அப்பாவு இருக்கையை விட்டு எழுந்த சென்றுவிடுவார். பின்னர், துணை சபாநாயகர் அல்லது அவையை நடத்துவதற்கான அதிகாரம் உள்ளவர்கள் அந்த இருக்கையில் அமர்ந்து, வாக்கெடுப்புக்கு உத்தரவிடுவார்கள்.
அதற்கு முன்னதாக, தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேசுவார். அதற்கு, முதலமைச்சரோ அல்லது அவை முன்னவரோ பதில் அளிப்பார்கள். பின்னர் குரல் வாக்கெடுப்போ அல்லது டிவிஷன் முறையிலோ வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும்.
சட்டப்பேரவையில் தற்போது, அதிமுக கூட்டணி 66 உறுப்பினர்களையே கொண்டுள்ளது. அதே நேரத்தில், திமுக 133 உறுப்பினர்களுடன் பலமாக உள்ளது. எனவே, நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியையே தழுவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நேரும் பட்சத்தில், அப்பாவு மீண்டும் சபாநாயகர் இருக்கைக்கு வந்து, அலுவல்களை தொடர்வார்.