தமிழ்நாட்டில், வடமாநில தொழிலாளர்கள் குறித்தான பிரச்னைகள் சமீபத்தில் அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். 


அவர் தெரிவித்துள்ளதாவது, வடமாநில தொழிலாளர்களுக்கு, எந்தவித தொந்தரவு கொடுக்காத மாநிலம் தமிழ்நாடு. வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகள் பரவி வருவது வருத்தமளிக்கிறது.


"உலகமே ஒன்று":


தமிழ் மக்களாகிய நாம் "உலகமே ஒன்று" என்ற கருத்தாக்கத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம், வட மாநில நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும் கீழ்த்தரமான வெறுப்பையும் ஆதரிக்கவில்லை.


சமீபத்தில், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய மில்ஸ் அசோசியேஷன் தெரிவிக்கையில், வடமாநில தொழிலாளர்கள் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதையும், அவர்களின் நலனை உறுதி செய்ய அவர்கள் எடுத்த நடவடிக்கைகளையும் விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளன.






மேலும், வடமாநிலத்தவர்கள் குறித்த அச்சம் நிலவுவதால், அவர்களது உறவினர்கள் தொலைபேசி வாயிலாக அழைத்து திரும்ப அழைப்பதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.


”அரசியல்வாதிகள் பேச்சில் கவனத்துடன் இருக்க வேண்டும்”


தமிழ்நாடு மக்கள் நன்றாக இருக்காங்க, அரசு நன்றாக உள்ளது, காவல்துறை சரியாக உள்ளது. ஆனால் அரசியல் கட்சி தலைவர்கள் சிலர், அமைச்சர்கள் வட மாநிலத்தவர்களை பானிபூரி விற்பவர், வடக்கத்தான் என தெரிவிக்கின்றனர். இதேபோல தொடர்ந்து பேசும்போது உண்மை என நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். ஆகையால், அரசியல்வாதிகள் பேச்சில் கவனத்துடன் இருக்க வேண்டும்.


தமிழனாக, தமிழ்நாட்டின் பெயர் கெடுவதை விரும்பவில்லை. சில தூண்டுதல்களால், வட மாநில தொழிலாளர்கள் சென்றுவிட்டால், திரும்ப கொண்டுவருவது சிரமம். பெங்களூருவில், 4 ஆண்டுகளுக்கு முன்பு , வட மாநில தொழிலாளர்கள் குறித்தான பிரச்னை எழுந்தது. அப்போது சென்றவர்கள், இன்னும் திரும்ப வரவில்லை. அதேபோல, தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். அவர்களுக்கு ஆணித்தரமாக சொல்ல வேண்டும், வட மாநிலத்தில் இருந்து வந்த தொழிலாளர்களுக்கு இம்மாநிலம் உறுதுணையாக இருக்கும் என்று.


கொள்கைகள் உருவாக்க வேண்டும்:


வட மாநிலத்தவர்களுக்கு, தமிழ்நாட்டில் கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும். வட மாநிலத்தவர்கள் முக்கியமானவர்கள் என்று, அவர்களுக்கு மனதளவில் ஏற்படுத்த வேண்டும். இனிமேல், வட மாநிலத்தவர்களை வைத்து சில அரசியல் தலைவர்கள், அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.