வடமாநில தொழிலளர்கள் விவகாரம் குறித்து தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஏபிபி நாடுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக ஏபிபி நாடு செய்திகள் பிரிவின் துணை ஆசிரியர் ராஜா சண்முகசுந்தரம் டிஜிபி சைலேந்திரபாபுவை தொடர்பு கொண்டு தொலைபேசி வாயிலாக பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும் டிஜிபி சைலேந்திரபாபு அளித்த பதில் குறித்து இங்கு காணலாம்.
கேள்வி: தமிழ்நாட்டில் தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடு காவல் துறை சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது?
சைலேந்திரபாபு டிஜிபி: இந்த வதந்தி பரப்பப்படும் போதே காவல் துறை சார்பில் மறுப்பு தெரிவித்தோம். தமிழ்நாடு முதலமைச்சரும் இதனை வீடியோவாக பதிவிட்டு மறுப்பு தெரிவிக்கச் சொன்னார்கள். அதன்படி வீடியோ பதிவிட்டு பீகார் மாநில காவல்துறையிடம் கூறினோம். மேலும் வட இந்திய சேனலையும் டேக் செய்திருந்தோம். அதன் பின்னர், இது பொய் செய்தி எனத் தெரியவந்ததும் வீடியோ பதிவிட்ட செய்தி நிறுவனம் வீடியோவை நீக்கிவிட்டார்கள். வடமாநிலத்தவர்கள் பலர் கொல்லப்பட்டார்கள் என்பது போன்ற மிகவும் தவறான மற்றும் மோசமான தகவலை, பரப்பி வடமாநில தொழிலாளார்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்த முயன்ற இரண்டு பத்திரிகைகள் மற்றும் இரண்டு தனிநபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இனி அவர்களை கைது செய்து ஏன் இவ்வாறு செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவோம். இவர்களை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளோம்.
கேள்வி: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் துறை சார்பில் என்னென்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? புகார் அளிக்க என்ன செய்ய வேண்டும்?
சைலேந்திரபாபு டிஜிபி: தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். இதுவரை எங்களுக்கு எந்தவிதமான புகாரும் வரவில்லை. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள சூழலால், காவல் துறை அதிகாரிகள் அந்தந்த பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்களைச் சந்தித்து உங்களுக்கு இங்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. நீங்கள் பயப்படாமல் இருக்கலாம் என கூறினர். இங்கு பாதுகாப்பாக இருப்பதாக வடமாநில தொழிலாளர்களும் கூறியுள்ளனர். இருப்பினும், ஊரில் இருந்து அழைக்கிறார்கள் என கூறியுள்ளனர். மேலும், திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக தனி கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் புகார் அளிக்க தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
கேள்வி: தற்போது வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு போவதாக கூறப்படுகிறது அது உண்மை தானா?
சைலேந்திரபாபு டிஜிபி: எனக்கும் தகவல் வந்தது, நானும் விசாரித்து பார்த்தேன். ஹோலி பண்டிகை வருவதால் சொந்த ஊருக்கு போகிறோம். ஏற்கனவே டிக்கெட் பதிவு செய்துவிட்டோம். 7ம் தேதி பண்டிகையை முடித்துவிட்டு மீண்டும் திரும்பி வந்து விடுவோம் எனக்கூறி முன்பதிவு டிக்கெட்டையும் காட்டுகிறார்கள். ஒருசிலர் இந்த சந்தர்பத்தினைப் பயன்படுத்தி ஹோலி பண்டிகைக்கு செல்கிறார்கள். அது அவர்களுடைய விருப்பம். அதில் நாங்கள் தலையிடவில்லை. அவர்களுக்கு 7ஆம் தேதி பண்டிகை என்பதால் இன்றுடன் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதும் இருக்காது. பண்டிகைக்குச் செல்லாதவர்கள் பணி புரிந்துகொண்டுதான் உள்ளார்கள்.