மீண்டும் பழைய ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஜாக்டோ - ஜியோ அமைப்பு நாளை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளது. 


இதுகுறித்து ஜாக்டோ - ஜியோ அமைப்பு தெரிவித்து உள்ளதாவது:


’’தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்- பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ 2017 ஆண்டு தொடங்கப்பட்டு, நியாயமான கோரிக்கைகளுக்காக, முந்தைய ஆட்சியாளர்களின் வெறி அடக்குமுறைகளை எதிர்கொண்டு, தொடர்ச்சியாக போராட்ட இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


இதன் தொடர்ச்சியாக, 2021-ல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்- பணியாளர்களின் ஆதரவோடு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி அமைந்து, ஆசிரியர்கள், அரசு எழியர்கள் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தோம். ஆனால் எங்களது அடிப்படை உரிமையான அக விலைப்படி என்பதே மறுக்கப்படக் கூடிய நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளோம். 


மேலும், ஈட்டிய விடுப்பினை சரண் செய்து, பணப் பயன் பெறக்கூடிய உரிமை என்பது கால வரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதோடு 1-4-2003க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்- பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது.


தமிழக முதலமைச்சர் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் கலந்து கொண்டார். எதிர்பார்ப்போடு ஏறத்தாழ ஒரு இலட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்கள் கலந்துகொண்ட இந்த வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில், தமிழக முதலமைச்சர் எந்த ஒரு அறிவிப்பினையும் வெளியிடாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.


இதன் தொடர்ச்சியாக, ஜாக்டோ ஜியோ வாழ்வாதார கோரிக்கைகளை வென்றெடுக்கும் முனைப்பாக இயக்க நடவடிக்கைகளை நடத்துவதென திட்டமிட்டு, செயலாற்றி வருகிறோம்.


19.02.2023 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வாழ்வாதார உரிமை மீட்பு போராட்ட ஆயத்த மாவட்ட மாநாடு


5.3.2023 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தமிழ்நாடு அரசு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்


24.3.2023 அன்று 20,000 கிலோ மீட்டர் மனிதச் சங்கிலிப் போராட்டம்.


தமிழக முதலமைச்சர் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புடன் இணைந்து எங்களில் ஒருவராக செயலாற்றியதை இப்போது நினைவு கூர்கிறோம். ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென  தமிழக முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறோம்’’.


இவ்வாறு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


பழைய பென்ஷன் திட்டத்தை மீட்டெடுத்தல், நிலுவையில் உள்ள அகவிலைப் படியைப் பெறுதல் மற்றும் சரண் ஒப்படைப்பு உரிமையை மண்டும் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் 05.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.