தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 18-ஆம் தேதி நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பின்னர் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. அதைத் தொட்ர்ந்து ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் துறை ரீதியிலான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதங்களில் போது தினமும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையின் முக்கிய நிகழ்வுகள் நேரலை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் பேசுவதை அரசு சார்பில் சரியாக நேரலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த ஐடி பிரிவு தலைவர் சிங்கை ராமச்சந்திரன் ஒரு ட்விட்டர் பதிவை செய்திருந்தார். அதில், “ கிட்டத்தட்ட 10 நிமிடம் வரை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசும்போது நேரலை நிறுத்தப்படுகிறது, எதிர்க்கட்சி பேசுவதை ஒளிபரப்ப துணிவில்லையா? தினமும் இப்படி செய்வதற்கு பதில் @TNDIPRNEWS தனது பெயரை @DMKITWING_ என மாற்றிக் கொள்ளலாம்!!” எனத் தெரிவித்திருந்தார்.
அந்தப் பதிவை தற்போது பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் ரீட்வீட் செய்து ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், “இவங்க கிட்ட censor board காரங்க டிரெயினிங் எடுத்துக்கலாம். பிரமாதமா நறுக்காரங்க” எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவை எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்