கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்? என பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.


திமுகவை சாடிய குஷ்பு:


இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ”எல்லையில் பிரபு போன்ற துணிச்சலான வீரர்கள் நம்மை பாதுகாக்கிறார்கள் என்பதால் தான், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பிரபுவின் மரணத்திற்கு காரணமான அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர் உட்பட திமுகவில் உள்ள அனைவரும் இரவில் நிம்மதியாக உறங்குகிறார்கள். அத்தகைய சூழலில் ராணுவ வீரர் ஒருவரை அடிப்பதும், அவர் இறப்பது என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.


வாய் திறக்காத முதலமைச்சர்:


பிரபு மரணம் தொடர்பாக காவல்துறை ஒரு வாரமாக அமைதியாக இருந்தது. ராணுவ வீரரின் மரணம் தொடர்பாக முதலமைச்சரோ அல்லது திமுகவை சேர்ந்த யாருமே பேசவில்லை. இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்து குரல் எழுப்பியபோதுதான் காவல்துறை முன் வந்து வாக்குமூலம் அளித்தது.


கடந்த ஒரு வார காலமாக அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? யாருடைய உத்தரவின் பேரில் காவல்துறையினர் வேலை செயல்படுகிறார்கள்? காவல்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு, அதே வழியில் செயல்பட வேண்டும், மாநிலத்தை ஆளும் அரசியல் கட்சியின் கட்டளைப்படி அல்ல. குற்றம்சாட்டப்பட்ட நபர் திமுக கவுன்சிலராக இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது” என குஷ்பு கடுமையாக சாடியிருந்தார்.  


பிரபுவின் சகோதரர் குற்றச்சாட்டு:


முன்னதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரபுவின் சகோதரர் பிரபாகர், ”6 முதல் 7 பேர் அடங்கிய கும்பலால் தான் தாக்கப்பட்டேன். பின்பு தம்பி பிரபு இரும்புக் கம்பி மற்றும் கத்தியால் தாக்கப்பட்டார். அவர் 6 நாட்கள் ஐசியுவில் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்” என  தெரிவித்தார்.


நடந்தது என்ன?


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த 33 வயதான பிரபு, கடந்த 8ம் தேதி தனது வீட்டின் அருகே இருந்த குடிநீர் தொட்டி அருகே துணிகளை துவைத்துள்ளார். இதுதொடர்பாக கேட்ட திமுக கவுன்சிலர் சின்னசாமிக்கும், பிரபுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதே நாளில் சின்னசாமி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, பிரபுவின் வீட்டிற்கு சென்று அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.


இதில் படுகாயமடைந்த பிரபு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரம் தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பிரபுவின் சகோதரர் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் சின்னசாமி மற்றும் அவரது மகன் ராஜபாண்டி உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதேநேரம், இந்த கொலையில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும், தனிப்பட்ட மோதல் காரணமாகவே இந்த சம்பவம் நேர்ந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.