President Visit: குடியரசுத் தலைவர் இன்று தமிழ்நாடு வருகை..! 5 அடுக்கு பாதுகாப்பு - ஆயிரக்கணக்கில் போலீஸ் குவிப்பு

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதன் முறையாக, திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார். இந்த பயணத்தின் போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் அவர், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள சிவராத்திரி சிறப்பு பூஜையிலும் பங்கேற்க உள்ளார்.

Continues below advertisement

இரண்டு நாள் சுற்றுப்பயணம்:

இரண்டு நாள் சுற்றுப்பயணத்திற்காக, இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் குடியரசு தலைவர் காலை 11.45 மணிக்கு மதுரை விமானநிலையம் வருகிறார். பின்னர் அவர், மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். 

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:

இதைமுன்னிட்டு, குடியரசு தலைவருக்காக கீழ சித்திரை வீதியில் உள்ள அஷ்டம சக்தி மண்டபம் அருகே தற்காலிக ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளது. சித்திரை வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் பல்வேறு கேமராக்கள் மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை வீதி முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

விமான நிலையத்தில் இருந்து பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம், தெற்கு வாசல், கீழ்வாசல், விளக்குத்தூண் வழியாக மீனாட்சியம்மன் கோயிலுக்கு குடியரசு தலைவர் வருவதால், அந்த பகுதியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடியரசு தலைவரின் பாதுகாப்பு கருதி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு காலை 11 மணியளவில் இருந்து பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கோவை பயணம்:

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தனி விமானத்தில் மாலை 3.10 மணியளவில் கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கு தமிழக அரசு சார்பில்  அவருக்கு  வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் குண்டுதுளைக்காத பிரத்யேக காரில் புறப்பட்டு ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.

சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு கோவை ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் தலைமை விருந்தினராக குடியரசு தலைவர் பங்கேற்கிறார். இதற்காக, மாலை 5.45 மணியளவில் அங்கு சென்று தியானலிங்கம், யோகேஸ்வர லிங்கத்தை வழிபாடு செய்கிறார். பின்னர் அவர், இரவு 7.30 மணிக்கு காரில் புறப்பட்டு ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகையில்  இரவு தங்குகிறார்.

மறைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை:

தொடர்ந்து, குடியரசு தலைவர் நாளை காலை 9 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். அங்கு போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்பு நண்பகல் 12 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கோவை விமானநிலையம் வந்து,  அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். அத்துடன் குடியரசு தலைவரின் இரண்டு நாள் தமிழக பயணம் நிறைவடைகிறது.

5 அடுக்கு பாதுகாப்பு:

குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு, கோவை, நீலகிரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. விமான நிலையம், அரசு விருந்தினர் மாளிகை மற்றும் குடியரசு தலைவர் செல்லும் பாதைகளிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாநகரில் 1,900 போலீசார், புறநகரில் 3,100 போலீசார் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 5 ஆயிரம் போலீசார் 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கோவையில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola