சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, பிஜிஆர் நிறுவனத்திற்கு மின்வாரியம் முறைகேடாக டெண்டர் ஒதுக்கியது தொடர்பாக ஆளுநரிடம் அண்ணாமலை மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான முழு தகவல் அண்ணாமலை வெளியே இருக்கும் செய்தியாளர்களிடம் இன்னும் சிறிது நேரத்தில் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரத் துறையில் ஊழலை மேற்கொண்டதாக அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்னால் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு செந்தில் பாலாஜியும் கடுமையான வார்த்தைகளால் பதில் கூறியிருந்தார். இதனால் அப்போதே ட்விட்டரில் வார்த்தைப் போர் வெடித்தது.
இந்த சூழலில், மதுரையில் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, ”தமிழக மின்சார வாரியத்தின் ரூ.4,442 கோடி மதிப்பிலான மின் திட்ட ஒப்பந்தம், அனைத்து விதிகளையும் மீறி பி.ஜி.ஆர். என்னும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி பிஜிஆர் நிறுவனத்தின் ஊழியர் போல் பேசுகிறார். பிஜிஆர் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கியது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
ஊழல் செய்ய ஆரம்பிக்கும் போது அதை தட்டிக்கேட்டால் சிறைக்கு அனுப்புவோம் என்றால் தயவு செய்து அனுப்புங்கள். சந்தோஷமாக சிறைக்கு சென்று, திரும்பி வந்ததும் திமுக அரசின் ஒவ்வொரு ஊழல்களையும் வெளிப்படுத்துவேன். திமுக மட்டும் ஆட்சியில் இல்லை. பாஜகவும் ஆட்சியில் உள்ளது என்பதையும் திமுகவுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று காட்டமாக விமர்சித்தார்.
இதற்கு டிவிட்டரில் பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ”பி.ஜி.ஆர். நிறுவனம் டெண்டர் எடுத்த ஆண்டு 2019. டெண்டர் கொடுத்த ஆட்சி அதிமுக. வாழ்ந்த 13700+ சொச்ச நாட்களில் 20000 புத்தகம் வாசித்திருக்கும் அதிமேதாவி ஆர்வக் கோளாறுகளுக்கு புரிதல் வேண்டும் அல்லது புரிந்துகொள்ளப் பக்குவம் வேண்டும். அரைவேக்காடுகளுக்கு இரண்டும் இல்லை” என்று பதிலடி கொடுத்திருந்தார்.