புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட சட்டப் பேரவை இருந்து வருகிறது. புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் மாத இறுதியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு வந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியிலும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாத நிலையே இருந்து வருகிறது. அதாவது, மார்ச் மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன்பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகிவிட்டது.


கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்த பிறகாவது முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போதும் அதே நிலைதான் தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில் 6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்பது மரபாகும். அந்த வகையில் கடந்த (பிப்வரி) மாதம் 23-ஆம் தேதி புதுச்சேரி சட்டசபை கூடியது. அன்றைய தினம் 20 நிமிடமே சட்டசபை கூட்டம் நடந்து முடிந்தது.




இதையொட்டி இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் தற்போதும் பல்வேறு காரணங்களால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு அரசின் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக புதுவை சட்டசபை வருகிற 30-ஆம் தேதி கூட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறுகையில், இ்ம்மாத இறுதியில் சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்பட உள்ளதாக தெரிவித்து இருந்தார்.


அதன்படி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப் படாத நிலையில் சட்டப் பேரவையில் கவர்னர் உரை இடம் பெறாது என்று தெரிகிறது.


இதற்கிடையே என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. எம்.எல். ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டப்பட உள்ளதையொட்டி கூட்ட அரங்கு சுத்தம் செய்யப்படுவதுடன் அங்குள்ள மேஜை, நாற்காலிகள் சுத்தம்செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.