நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைத்ததற்கான அரசாணையை எதிர்த்து பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


இந்த மனுவில், நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்திற்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது. உச்சநீதிமன்ற உத்தரவு, தேசிய நலன் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. மருத்துவ கல்வியை மேம்படுத்த மருத்துவ ஆணையத்திடம் மட்டுமே ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு இதை அரசியலாக்கக் கூடாது. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க ஏதுவாக உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


தி.மு.க.வினர் தங்களது தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்து இருந்தனர். அதன்படி, தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். மேலும், இந்த குழுவில் கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.


"இந்த நிமிடம்வரை தமிழகத்தில் நீட் தேர்வு உள்ளது" - அமைச்சர் சுப்ரமணியன்..!


இந்த குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன், உறுப்பினர்களாக டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், டாக்டர் ஜவஹர் நேசன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், சட்டத்துறை அரசு செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர், மருத்துவ கல்வி இயக்ககத்தின் இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுகின்றனர்.




இதனைத்தொடர்ந்து, ‘நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் பெரும்பாலானோர் கருத்தாக இருக்கிறது. வேண்டும் என வெகுசிலர் மட்டுமே கூறியுள்ளனர்.நீட் தேர்வு பாதிப்புகள் தொடர்பான மேலும் சில கோப்புகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அவை கிடைத்தவுடன் தேர்வு குறித்த முடிவுகளை குழு அரசுக்குத் தெரிவிக்கும்.அரசு கேட்டுள்ள விளக்கங்களுக்கு மட்டுமே குழு பதில் அளிக்கும்’ என அவர் கூறினார். இதுவரை  25000 கடிதங்கள் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் வந்திருப்பதாக முன்னாள் நீதிபதி ராஜன் குறிப்பிட்டார். 


நீட் தேர்வு தொடர்பான கருத்துக் கேட்புக்காக வெளியிடப்பட்ட நாளிதழ் விளம்பரத்தில், தமிழ்நாடு அரசால் நீட் தேர்வின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்கள் தங்களின் கருத்துரைகளை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் அஞ்சல் வழி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மருத்துவக் கல்வி இயக்குநகரத்தில் வைக்கப்பட்டுள்ள தனிப் பெட்டியில், 23.06.2021க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.


Tamil Nadu NEET 2021 Exam: நீட் தேர்வு ரத்தாகாது என்பது திமுகவிற்கு தெரியும் -எல்.முருகன்