தமிழக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப்பணியாளர்களுக்கு ஒரு லட்சம் முககவசங்களை வழங்கும் நிகழ்ச்சியை சென்னை தி. நகரில் உள்ள பாஜகவின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்,



கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள முழுமுடக்க காலத்தில் தமிழக பாஜக சார்பில் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகிறோம். இன்று முன்களப்பணியாளர்களுக்கு ஒரு லட்சம் முகக்கவசத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்கவுள்ளோம் என தெரிவித்த அவர், தமிழகத்தில் திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று 30 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் பல தாய்மார்களிடம் இருந்து எனக்கு கோரிக்கை வருகிறது,
திமுக தனது தேர்தல் அறிக்கையில் மாதம்தோறும் பெண்களுக்கு 1000 ரூபாய் தருவதாக கூறினார்கள் ஆனால் அதனை தற்போது வரை கொடுக்கவில்லை. எனவே தேர்தல் அறிக்கையில் கூறிய தொகை உடனடியாக கொடுக்க வேண்டும் என அவர் கூறினார். மேலும் நூலகங்களில் கட்டாயம் முரசொலி நாளிதழ் வாங்க வேண்டும் என்ற சுற்றறிக்கையின் மூலம் அதிகாரதுஷ்பிரோகம் நடந்துள்ளது, இதனை  திரும்ப பெற வேண்டும் என கூறிய எல்.முருகன். அனைத்து நாளிதழ்களையும் வாங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றார். மிக பெரிய அதிகார துஷ்பிரயோகம் ஆட்சி அமைந்த 30 நாட்களில் நடந்து வருவதாக குறிப்பிட்ட அவர், 


நீட் தேர்வு விவகாரத்தில் திமுக, மாணவர்களை குழப்பக் கூடாது எனவும் நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில் தான் என்றும் கூறினார். மேலும் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு மூலம் நிறைய குழந்தைகள் மருத்துவ படிப்பை பெற்றுள்ளனர். அவர்கள் யாரும் படிக்க வர கூடாது என திமுக நினைக்கிறது என குற்றம்சாட்டியுள்ள எல்.முருகன். மாணவர்கள் மனதை குழப்பும் செயலை தான் திமுக செய்து வருவதாகவும், மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் செயலை திமுக செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திமுகவிற்கு தெரியும் ஆனாலும் மக்களையும், மாணவர்களை ஏமாற்ற திமுக முயற்சி செய்கிறது என கூறிய எல்.முருகன். இந்து கோயிகளில் நிலங்களை அரசு மீட்டு வருகிறது, பாரபட்சம் இன்றி அனைத்து கோயில் சொத்துக்களையும் இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.