ஏப்ரல் 6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்ட போது நெல்லை பாஜக வேட்பாளர் நாகேந்திரனின் கார் ஓட்டுநர் சதீஷ் மற்றும் உதவியாளர்களிடம் இருந்து 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பணம் தொடர்பாக விளக்கம் அளிக்க நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பினர்.

Continues below advertisement

வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று தாம்பரம் காவல் நிலையத்தில் ஆசைதம்பி, நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் மற்றும் ஜெயசங்கர் உள்ளிட்டோர் நேரில் வந்து காவல் உதவி ஆணையர் நெல்சன், இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் ஆஜரானார்கள்.

அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் அளித்த வாக்கு மூலத்தில், தனக்கும் இந்த பணத்திற்கும் எந்த சம்மதமும் இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் என்னை தொடர்பு கொண்டு, மூன்று நபர்கள் பணம் எடுத்து வருவதாகவும் அவர்களுக்கு 2 நபர்களை பாதுகாப்புக்கு அனுப்பும்படியும் கேட்டுக்கொண்டதால் மட்டுமே ஜெய்சங்கர் மற்றும் ஆசைத்தம்பி ஆகியோரை தான் அனுப்பியதாக வாக்குமூலம் கொடுத்தார். இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உறவினர் மணிகண்டன்  மீண்டும் நாளை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Continues below advertisement

இதற்கிடையில், இந்த பண பறிமுதல் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திருநெல்வேலி தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராகவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் கொண்டு சென்றது சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணம் பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருதமுடியாது எனவும், இருப்பினும், இதுசம்பந்தமாக அமலாக்கத் துறையின் விளக்கத்தை பெற்று தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து, மனுவுக்கு ஏப்ரல் 24 ம் தேதிக்குள் அதாவது இன்று பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.