“திமுகவை சேர்ந்தவர், தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து ரூ.4000 கோடி முதல் ரூ.5000 கோடி வரையில் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஒருவேளை அப்படி நடந்தால் இந்த ஊழல் தொடர்பான ஆவணங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவோம்” என்று தமிழக மின்துறை அமைச்சர் மற்றும் மின்துறை அதிகாரிகளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்தார். அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தி விளக்கம் அளித்தார்.
அதில், “பொத்தம் பொதுவாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியுடன் பாஜக தலைவர் பேசுகிறார். சரியாக எதுவும் தெரியாமல் அவதூறு பரப்புவதை அவர் தவிர்க்க வேண்டும். இது பக்குவமற்ற ஒன்று என்றார். இது குறித்து ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு கேள்வியைக்கேட்டு அதற்கான ஆதாரம் இதுவென மேலும் ட்வீட்டையும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ட்வீட்டில், தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்களுக்கு பல மாதங்களாக எந்தத் தொகையும் வழங்கப்படாமல் திடீரென ரூ.29.64 கோடி வழங்கப்பட்டதற்கு காரணம் என்ன? இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் சொல்ல முடியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சில ஒப்பந்ததாரர்களின் பெயர்களையும், அவர்களது வங்கி கணக்கில் போடப்பட்ட பணம் தொடர்பாகவும் ஒரு புகைப்படத்தையும் அண்ணாமலை பகிர்ந்துள்ளார். அந்த ட்வீட்டின் இறுதியில் இந்த வாரம் அனல், அடுத்த வாரம் சோலார். அடுத்த வாரத்துக்கு பின் தயாராகிக் கொண்டிருக்கும் ‘பெரிய’ நிறுவனம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையில் குற்றச்சாட்டுக்கும், கேள்விக்கும் மின்சாரத்துறை அமைச்சர் இதுவரை பதிலளிக்காத நிலையில், இது குறித்து விரைவில் விளக்கம் ஏதும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.