திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் அருகே உள்ள நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசத்தின் மகன் பிரபு (35) பூ வியாபாரம் செய்து வருகிறார். சிவப்பிரகாசத்துக்கு சொந்தமான 3 சென்ட் வீட்டுமனையில் ஒரு பகுதியில் பிரபு தனது மனைவி சரண்யா, மகள்கள் தேவி, சுமித்ரா. மகா லட்சுமி ஆகியோருடன் வீடுகட்டி வசித்துவந்தார். மற்ற 2 நபர்களும் அதே ஊரில் தனித்தனியாக வசித்துவருகின்றனர். இந்நிலையில் பிரபு தனது தந்தையிடம் தனக்கு கூட்டுப்பட்டாவாக உள்ள இடத்தை தனியாக பாகம் பிரித்து தனிப்பட்டாவாக வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு சிவப்பிரகாசம், அண்ணன், தம்பிகள் 3 நபர்களும் சேர்ந்து முடிவு செய்து தனிப்பட்டாவாக மாற்றி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இப்பிரச்னையில் அண்ணன் தம்பிகளுக்குள் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது .
அதனை தொடர்ந்து பிரபு மற்றும் அவரது அண்ணன்கள் 2 நபர்கள் சேர்ந்து நடுக்குப்பம் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று தங்களது கூட்டுப்பட்டாவை பிரித்து தனித்தனிப்பட்டாவாக மாற்றித்தர வேண்டும் என்று மனு அளித்துள்ளனர். இதற்காக ஒரு மாதத்துக்கும் மேல் பிரபுவும் அவரது அண்ணன்களும் அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பிரபு, நடுக்குப்பத்தில் இருந்து விநாயகபுரம் செல்லும் சாலையில் ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் பகுதி அருகே உள்ள குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும், தற்கொலைக்கு முன்னதாக குளத்தின் மீது, தான் ஒரு மாதகாலமாக பூர்வீக சொத்தை பிரித்து தனித்தனி பட்டாவாக வழங்க வேண்டும் கேட்டு மனு அளித்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகின்றது. கிராம நிர்வாக அலுவலரால் அலை கழிக்கப்பட்டதாகவும், விஏஓ கூட்டு பட்டாவை பிரித்து தனிப்பட்டா வழங்க 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், இதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும், சம்பந்தப்பட்ட விஏஓ மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது தற்கொலைக்கு விஏஓதான் காரணம் என்று மொபைல் போனில் வலைத்தளமாக பேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதன் பிறகு குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரது பேஸ்புக் லைவ் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைப்பார்த்த பிரபுவின் குடும்பத்தினர். நடுக்குப்பம் கிராம பொதுமக்கள் ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் அருகில் உள்ள குளத்தில் சென்று பார்த்தபோது பிரபு சடலமாக மிதந்து கொண்டிருந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையில் களம்பூர் காவல்துறை விரைந்து சென்று பிரபுவின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் பேசியபோது: இந்த தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டா கேட்டு விஏஓவிடம் பிரபு சென்றுள்ளார். அவர் பணம் கேட்டாரா இல்லையா என்பது தெரியாது. அதே நேரத்தில் கூட்டுப்பட்டாவை பிரித்து செய்து தனிப்பட்டா வழங்குவதற்கு முன் அதை சர்வேயரை கொண்டு அளப்பது போன்ற நடைமுறைகள் உள்ளன. அதை பிரபுவிடம் விஏஓ தெரிவித்ததாகவே எங்களுக்கு தெரிய வந்துள்ளது. எதுவும் விசாரணை முடிந்த பிறகே தெரிய வரும்' என்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028. தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060