தமிழகத்தில் பருவ மழைக்காலம் நெருங்கி வருவதால் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வரும் 26 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்துமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.  பாதுகாப்பான இடங்களில் மக்களை தங்க வைக்குமாறும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக நிவாரண பொருட்களுடன் உடனே கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில், சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஏரியின் கதவுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றும் நீர் இருப்பு, மதகுகளின் உறுதி தன்மை குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

 


 

ஒவ்வொரு ஆண்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படுவதால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் இம்முறை ஏரியை திறப்பது குறித்து மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டுமென அறிவுறுத்தினார். மேலும் கரைகளை பலப்படுத்துதல், மதகுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முதல்வருடன் அமைச்சர்கள் கே.என் நேரு, துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.



 

செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்வதற்கு முன்னர் புழல் ஏரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கு 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பணிகள் குறித்து முதல்வர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஏரியின் நீர் இருப்பு, மதகுகளின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர், நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆகாய தாமரையை அகற்றவும், கரையை பலப்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.



 

புழல் ஏரியின் மொத்த கொள்ளவு 3.30 டி.எம்.சி.யில் தற்போது 2.77 டி.எம்.டி. தண்ணீர் உள்ளது. 1999 ஆம் ஆண்டில் அன்றைய முதல்வர் கருணாநிதி புழல் ஏரியை ஆய்வு செய்தார். தற்போது 22 ஆண்டுகளுக்கு பின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் புழல் ஏரியை ஆய்வு செய்துள்ளார். முதல்வருடன் அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சந்தீப் மற்றும் மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 







மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



பேஸ்புக் பக்கத்தில் தொடர



ட்விட்டர் பக்கத்தில் தொடர