சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாள் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையே மாவீரர் அழகுமுத்துக் கோன் குருபூஜை விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:


''மாவீரர் அழகுமுத்துக் கோனின் வாழ்க்கை வரலாறு தமிழக பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும். 31 ஆண்டுகள் மட்டுமே பூமியில் வாழ்ந்த வீரர் அவர்.


அனைத்து பேய்களையும் ஒரே நேரத்தில் ஓட்ட முடியாது


தமிழ்நாட்டில் பல பேய்கள் உள்ளன. தமிழக மக்களைப் பிடித்த பீடைகள் அவர்கள். 70 ஆண்டுகளாக வளர்ச்சியில்லாததற்குக் காரணமே இந்தப் பேய்கள்தான். அந்தப் பேய்களை விரட்டவே இந்த வேதாளம் வந்திருக்கிறது. அனைத்து பேய்களையும் ஒரே நேரத்தில் ஓட்ட முடியாது. ஒவ்வொரு பேயாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பேயை ஓட்டிவிட்டு, அந்தப் பேய்க்கு வருகிறேன். பொறுத்திருங்கள்''.


இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார். 


அண்ணாமலை என்கின்ற வேதாளம் தற்பொழுது எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார். இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை இவ்வாறு பதில் அளித்துள்ளார். 


அண்ணாமலை உருவ பொம்மையை காங்கிரஸார் எரிப்பது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், ’’கோவையில் 10 பேர் வந்தார்கள். நெல்லையில் 6 பேர் வந்தார்கள். உருவ பொம்மையைத் தூக்கி வருவதற்கு சிலர் வர வேண்டுமே. அதற்காக வந்திருக்கிறார்கள். நான் செல்வப் பெருந்தகையை முன்னாள் ரவுடி என்று சொன்னது பொய்யா?


உண்மையான காங்கிரஸார் அனைவரும் எனக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்


குண்டர் சட்டத்தில் அவர் கைது செய்யப்படவில்லை என்று சொல்கிறாரா? உண்மையான காங்கிரஸார் அனைவரும், எனக்குத் தொலைபேசியில் நன்றி தெரிவிக்கிறார்கள். செல்வப் பெருந்தகை குறித்து உண்மையைப் பேசினேன் என்று பாராட்டு தெரிவிக்கிறார்கள்’’ என்று அண்ணாமலை தெரிவித்தார். 


தொடர்ந்து நாம் தமிழர் சாட்டை துரைமுருகன் கைது குறித்த கேள்விக்கு, ‘’தமிழ்நாட்டில் கூலிப் படைகள், ரவுடிகள் மீது காட்ட வேண்டிய வீரத்தை சாட்டை துரைமுருகனை மீண்டும் மீண்டும் கைது செய்து, காவல்துறை காட்டிக் கொண்டிருக்கிறது’’ என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார். 


இதையும் வாசிக்கலாம்: அண்ணாமலை வேதாளம் அதிமுகவை விட்டுட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறுகிறது: ஜெயக்குமார் தாக்கு!