அண்ணாமலை என்கின்ற வேதாளம் தற்பொழுது எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அழகு முத்துகோன் திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.


மாவீரன் அழகு முத்துகோன் திருவுருவச் சிலை மற்றும் கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, ஜெயக்குமார் மற்றும் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:


’’மாவீரர் அழகுமுத்துக்கோன் வெள்ளையனுக்கு எதிராக குரல் கொடுத்தவர். வெள்ளையனுக்கு அடிபணியாமல் வாழ்ந்த முதல் வீரர் அழகு முத்துக் கோன்தான்.


தலையே போனாலும் காட்டிக் கொடுக்க மாட்டேன்


அழகு முத்துக்கோனை சிறைப்பிடித்து துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி, தன்னுடன் இருக்கும் நபர்களை காட்டிகொடுக்க  வேண்டும் என கூறியும் தன் தலையே போனாலும் சரி காட்டிக் கொடுக்காமல், அந்த துரோகத்தை நான் செய்ய மாட்டேன் என கூறினார், அவர் அந்த அளவுக்கு உறுதியோடு இருந்தார். வீரனாகப் பிறந்து வீரனாகவே வாழ்ந்தார்.


லுங்கி அணிந்து கொண்டு பேட்டி


அண்ணாமலை என்கின்ற வேதாளம் தற்போது எங்களை விட்டு செல்வப் பெருந்தகை மீது ஏறி இருக்கிறது. லுங்கி அணிந்து கொண்டு பேட்டி அளிக்கிறேன் என அண்ணாமலை கூறியிருக்கிறார், லுங்கி அணிந்து கொண்டு பேட்டி அளிப்பது ஒன்றும் அவ்வளவு அவ மரியாதையான செயல் அல்ல. இன்று சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் லுங்கி அணிகிறார்கள், இஸ்லாமியர்கள் லுங்கி அணிகிறார்கள், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் இன்று லுங்கி அணிகிறார்கள். எனவே அது அவ மரியாதைக்குரிய செயல் அல்ல, நான் பெரும்பாலும் வேட்டி அணிந்துதான் பேட்டி கொடுப்பேன்’’.


இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.