யானை என்றால் கம்பீரம்,வலிமை, ஆச்சரியம் ஆஹோ ஓஹோ என நாம் கொண்டாடினாலும் அதே யானைக்கு தனது தலையில் தானே மண்ணை வாரி இறைத்துக் கொள்ளும் குணமும் உண்டு. தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் நிலைமை தற்போது இதுதான்.தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தது, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என நிதியமைச்சர் அடுத்தடுத்து சிக்ஸர்களாக அடித்தாலும் ட்விட்டரில் அவரது ட்வீட்கள் அத்தனையும் அண்மைக்காலமாக தார் ஊற்றிய சாலையில் தறிகெட்டு ஓடும் வாகனங்கள் ரகமாகவே உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் வானதி ஸ்ரீனிவாசன், அதிமுகவின் ஜெயக்குமார் என இதுநாள் வரை வெறும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களைத் தாக்கியே அவரது ட்வீட்கள் இருந்தநிலையில் அண்மையில் அவரது ட்வீட் திமுகவைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்களில் ஒருவரான டி.கே.எஸ். இளங்கோவனையே தாக்கியிருக்கிறது. 


’இரண்டு கிலோ இறாலுக்கு வாங்கிவிடலாம்...கட்சியின் இரண்டு தலைவர்களாலும் இரண்டு முறை பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் உளறுகிறார்’ என டி.கே.எஸ். இளங்கோவன் பற்றி நேரடியாகவே ட்வீட் செய்த பி.டி.ஆர். பின்னர் ஆர அமர ஒரு மணிநேரம் கழித்து அந்த ட்வீட்டை டெலிட் செய்திருந்தார். 


இதுகுறித்து கட்சியினர் கப்சிப்பாக இருந்தாலும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பி.டி.ஆர்., ஐ விட்டுவைப்பதாக இல்லை. 






 


'தமிழ்நாடு நிதிநிலையை நிர்வகிப்பவர் தனது தினசரி வேலையைச் செய்வதற்கும் முடிவுகளை எடுப்பதற்கும் தெளிவான, நிலையான மனநிலையைக் கொண்டிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் அதற்கு ஆபத்து ஏற்படுத்துபவர்கள் நிதியமைச்சராக இருக்கக்கூடாது என்பதை முதலமைச்சர் கவனத்தில் கொள்ளவேண்டும்’ என ட்வீட் செய்திருந்தார். 


அதில் பி.டி.ஆர். டெலீட் செய்திருந்த ட்வீட்டும் இணைக்கப்பட்டிருந்தது.மற்றொரு பக்கம், அதிமுகவின் ஜெயக்குமார்'தம்பி! ட்விட்டர் உலகத்திலிருந்தும் மற்றவர்களை வசைபாடுவதிலிருந்தும் விலகி மக்களைப் பற்றிச் சிந்தி’ என ‘அரசியலிலும் உனக்கு அண்ணன்’ ஜெயக்குமார் எனக் காரசாரமாகவே கடிந்துகொண்டுள்ளார். 






பி.டி.ஆர். பேசியது சரியா தவறா? என்கிற விவாதம் ஒருபக்கம் இருந்தாலும் சுட்டெரிக்கும் கருத்தையும் சபை மாண்போடு கூறுவது என்பது திராவிடக் கட்சியின் அடிப்படைப் பண்புகளில் ஒன்று. கட்டுப்பாடற்றுப் பேசியவர்கள் மத்தியில் நாவடக்கம் கொண்டவர் என அறியப்பட்ட அண்ணாவின் வழித்தோன்றல்கள் நாகாப்பது கட்சியின் மாண்பையும் காக்கும்.