வட்டி தராத நிதி நிறுவன அதிபர் மீது வழக்குப்பதிவு
கரூரில் டெபாசிட் செய்த பணத்துக்கு, உரிய வட்டி தராத நிதி நிறுவன அதிபர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கரூர் அருகே எஸ்.வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த தங்கவேல், 70 ;டைலர். இவர், கரூர் ராமகிருஷ்ண பரத்தில் உள்ள தனியா நிதி நிறுவனத்தில் கடந்த ஆண்டு, 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளார். ஆனால், நிதி நிறுவன அதிபர் திவாகர் கூறியபடி, வாரந்தோறும் 4000 ரூபாய் வட்டி தொகையை சரிவர தரவில்லை. இது குறித்து, தங்கவேல் கரூர் டவுன் போலீசில் அளித்த புகாரின் பேரில், திவாகர் மீது, போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றார்.
டாஸ்மாக் கடை முன் பணம் பறித்தவர் கைது
வாங்கல் அருகே டாஸ்மாக் கடை முன் கூலித்தொழிலாளியிடம், பணம் பறித்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆண்டனூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், 49; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் கரூர் அருகே வாங்கலில், டாஸ்மாக் கடை முன், நின்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் செவ்வந்தி பாளையத்தை சேர்ந்த பெயிண்டர் இளவரசன், 25; என்பவர், ராஜேந்திரனை மிரட்டி, 300 ரூபாய் பறித்தனர். இதுகுறித்து, ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில், வாங்கல் போலீசார் இளவரசனை கைது செய்தனர்.
இரும்பு சீட்டுகள் திருட்டு கட்டட தொழிலாளி புகார்
கரூரில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான இரும்பு சீட்டுகளை திருடி சென்றவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரி, கட்டட தொழிலாளி போலீசில் புகார் அளித்துள்ளார்.கரூர் காமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர், 42; கட்டட தொழிலாளியான இவர், கரூர், காயத்ரி நகரில், வாடகை இடத்தில், 164 இரும்பு சீட்டுகளை வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, முன்பக்க கதவை உடைத்து, இரும்பு சீட்டுகளை, அடையாளம் தெரியாத நபர்கள், திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ஒரு லட்ச ரூபாய். இது குறித்து, சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாலிபர் தற்கொலை
கரூரில் கூலித்தொழிலாளி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் கங்கா முடி தெருவை சேர்ந்த மனோகர் மகன் ராஜா, 28; கூலித்தொழிலாளி. மதுப்பழக்கத்திற்கு அடிமையான, ராஜா சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜா ,வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, தாய் விஜயா, 57; அளித்த புகாரின் பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் திருட்டு போகும் சைக்கிள்கள்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் நிறுத்தப்படும் சைக்கிள்கள், திருடப்பட்டு வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரூர் அருகே காந்திகிராமத்தில் அரசு மருத்துவர் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது இந்த மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் நோயாளிகளின் கார், இருசக்கர வாகனங்களை, தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளே அனுமதிப்பதே இல்லை. இதனால் மருத்துவமனைக்கு வெளியே சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திவிட்டு பொதுமக்கள், நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் நிறுத்தப்பட்ட பலரது சைக்கிள்கள் காணாமல் போய் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதை தவிர்க்க வாகனங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. இதனால் வாகனங்களை வெளியே நிறுத்திவிட்டு செல்கிறோம். இதில் சைக்கிள்கள் மட்டும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது. டூவீலர்களில் அலாரம், சைடு லாக் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் சைக்கிள்களை மட்டும் குறி வைத்து திருடுகின்றனர். வசதி இல்லாத நிலையில்தான் ஏழைகள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர் அவர்களின் சைக்கிள்களை திருடுவோர் மீது பசுபதிபாளையம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.