கரூர் மாநகராட்சியில் பொங்கல் விழா கோலாகலம்
பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் கரூர் மாநகராட்சி வளாகத்தில் 11 பானைகளில் பணியாளர்கள், கவுன்சிலர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்தனர். மேயர் கவிதா, துணைமேயர் சரவணன், மண்டல தலைவர்கள் கனகராஜ், அன்பரசன், ராஜா, சக்திவேல், மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வழிபாடு நடந்தது. மாநகராட்சியில் முன்புறம் உள்ள சாலையில் கோலப்போட்டி நடந்தது.
தொடர்ந்து கரூர் சி.எஸ்.ஐ மைதானத்தில் நடந்த விளையாட்டுப் போட்டியில் பெண் கவுன்சிலர்கள், பெண் ஊழியர்கள், பெண் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்ட வேகநடை, இசை நாற்காலி, பாட்டிலில் நீர் நிரப்புதல், பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல், லக்கி கார்னர் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. ஆண் கவுன்சிலர்கள், ஆண் சுகாதாரப் பணியாளர்கள், அனைத்து பிரிவு ஆண் அலுவலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, பாட்டிலில் நீர் நிரப்புதல், கயிறு இழுத்தல், லக்கி கார்னர், குண்டு எறிதல் போட்டிகள் நடந்தது.
பரிசளிப்பு விழாவில் மாநகராட்சி மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் நகர் நல, சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் வேட்டி, சேலை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் செய்திருந்தனர். மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் லட்சியவர்ணா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். காலை 6:30 மணிக்கு தொடங்கிய விழா மாலை 6:30 மணிக்கு நிறைவு பெற்றது.
காளைகளின் உரிமையாளர்கள்- மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வினியோகம்.
தோகைமலை ஆர்.டி.மலையில் வருகிற 17-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதை அடுத்து காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன்கள் வினியோகம் செய்தனர்.
ஜல்லிக்கட்டு
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்.டி. மலையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டி கரூர் மாவட்டத்தில் இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் நடக்கும். இதையடுத்து இந்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆர்.டி. மலையில் வருகிற 17-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதையடுத்து முன்னேற்பாடு பணிகளை குளித்தலை ஆர்.டி.ஓ புஷ்பா தேவி கடந்த 27-ஆம் தேதி ஆய்வு செய்தார்.
இதை அடுத்து நேற்று 2-நாளாக குளித்தலை ஆர். டி.ஓ.புஷ்பா தேவி ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல், ஜல்லிக்கட்டு காளை வரும் பாதை, மாடுபிடி வீரர்களுக்கான பாதுகாப்பு இடம், பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு இடம், வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்படும் ஜல்லிக்கட்டு காளைகள் இறுதியாக சென்று நிற்கும் இடம், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து இடங்கள் மற்றும் மின் இணைப்பு வசதி, தீயணைப்பு வசதி, அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் ஆய்வு செய்தார்.
உத்தரவு
பின்னர் ஆர்.டி. மலையை சுற்றி உள்ள கிணறுகளில் தடுப்பு அமைக்க வேண்டும், தன்னார்வலர்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளில் உரிமையாளர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக அனுமதி கூடாது, பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், அதிகாரிகள், விழா கமிட்டியாளர்கள், மொபைல் டாய்லெட்(கழிப்பிடம்), குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வருகிற 16-ஆம் தேதிக்குள் அனைத்து ஏற்பாடுகளை நிறைவு செய்ய வேண்டும் என்று விழா குழுவினருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது கால் நடைத்துறையினர், போலீசார் வருவாய்த் துறையினர், ஜல்லிக்கட்டு விழா குழுவினர் உடனிருந்தனர்.
டோக்கன் விநியோகம்
மேலும் வருகிற 17-ஆம் தேதி ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, அரியலூர், தஞ்சாவூர், உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து 800 காளைகளின் உரிமையாளர்கள், 400 மாடு பிடி வீரர்களுக்கும் தங்களது பெயர்களை கூறி டோக்கன்களை பெற்று சென்றனர். இதையடுத்து இந்த பணி முடித்து வைக்கப்பட்டது.