கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆலயமான புகழூர் நானப்பரப்பு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழாவில் ஆலயத்தில் காப்பு கட்டுதலை தொடர்ந்து 15 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியான இன்று தீமிதி (பூக்குழி இறங்கும்) திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குழந்தை பாக்கியம் வேண்டி தங்களது குழந்தைகளுடன் தீமிதி திருவிழாவில் பங்கேற்றனர்.




நானபரப்பு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத தீமிதி திருவிழாவை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் உற்சவர் ஸ்ரீ மாரியம்மனை மேளதாளங்கள் முழங்க தோளில் சுமந்தவாறு ஆலயம் வந்தடைந்தனர். அதை தொடர்ந்து கோவில் பூசாரி சாமி ஆடியபடி பூமதி திருவிழாவை தொடங்கி வைத்த பிறகு பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள் வெள்ளை சேலை அணிந்து ஓம் சக்தி பராசக்தி என்ற கோசத்துடன் தீமிதி திருவிழாவில் பங்கேற்றனர். நீண்ட நாட்களாக குழந்தை வரம் வேண்டி குழந்தை பெற்றவுடன் பக்தர்கள் தங்களது குழந்தைகள் தோளில் சுமந்தவாறு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 




கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றின் காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சிறப்பித்தனர். அதை தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் ஆங்காங்கே அன்னதானமும், நீர்மோர், கம்மங்கூழ் உள்ளிட்ட பிரசாதமும் வழங்கப்பட்டது. பின்னர் அனைவரும் ஆலயத்தில் சென்று மூலவர் ஸ்ரீ மாரியம்மனை தரிசித்து இல்லம் சென்றனர். 




அதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னர் நாளை சுவாமி ஸ்ரீ மாரியம்மன் கரகம் மற்றும் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்  நானபரப்பு அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீமிதி ( பூக்குழி இறங்கும்) திருவிழாவிற்காக  சிறப்பு பேருந்து வசதிகளும் சிறப்பாக செய்திருந்தனர். அதேபோல் புகளுர், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தீயணைப்பு வண்டியுடன் பாதுகாப்பு பணியிலும், வேலாயுதம்பாளையம் போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.