தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட சித்தா கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்ற 100 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உணவே மருந்து, மருந்தே உணவு  என்ற அடிப்படை தத்துவத்தை கொண்ட தமிழ் மருத்துவமாகிய சித்த மருத்துவ சிகிச்சையால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று நோயாளிகள் விரைவாக குணமடைந்தனர். தற்போது கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், சித்த மருத்துவ சிகிச்சையின் பயன் இத்தருணத்திலும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக புதிதாக 14 சித்தா சிறப்புகொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்திட தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.




அதன் அடிப்படையில், வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சித்தா சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே மாதம் 12 -ஆம் தேதி  மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 2-வது சித்தா சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அவர்கள் திறந்து வைத்தார்.


இச்சிறப்பு மையத்தில், அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் திறந்த வெளியில் ஒருங்கிணைந்த வகையில் சித்தர் யோகா, திருமூலர் பிராணாயாமம், வர்ம சிகிச்சை, சித்தர் முத்திரைகள், மூலிகை நீராவி சிகிச்சை, மனநல ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும், அவர்களுக்கு சத்தான உணவுடன் காலை சீரண குடிநீர், மாலையில் கரிசாலை பால் மற்றும் இரவில் சுக்கு கஞ்சி வழங்கப்படும். அத்துடன் இச்சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பும் நோயாளிகளுக்கு ‘ஆரோக்கியம்’ என்ற மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. இம்மருந்து பெட்டகத்தில் உடல் சோர்வு நீங்கி, உடல் ஆரோக்கியம் பெற சித்த மருந்துகள் இடம்பெற்றுள்ளது.




கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பதற்காக சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம். ஜெயின் கல்லூரியில் 70 படுக்கை வசதிகளுடன் சித்தா சிறப்பு கொரோனா மையமும், 70 படுக்கை வசதிகளுடன் கூடிய அலோபதி சிறப்பு கொரோனா சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டது. இந்த மையத்தில் கடந்த 2 வாரத்தில் 140 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர் அதில் இன்று காலை வரை 102 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை இந்த சிறப்பு சித்த மருத்துவமனையில் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




இதுகுறித்து கண்காணிப்பு அலுவலர் மருத்துவர் சாய் சதீஷ் தெரிவிக்கையில், லேசான அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் இல்லாமல் இருக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் இதுவரை இங்கு 102 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்புகிறார்கள். மேலும் இந்த மையத்தில் இணை நோயாளிகளாக சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்டவர்களும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.




அதேபோல் இவர்களுக்கு மூன்று வேளையும் மூலிகை உணவுகள் அளிக்கப்படுகிறது. திணை பொங்கல், வெற்றிலை குடிநீர், சித்தர் முத்திரைகள், மூலிகை நீராவி சிகிச்சை, மனநல ஆலோசனைகள், மூச்சுப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 6 பேர் கொண்ட மருத்துவக்குழு தொடர்ந்து இந்த மருத்துவமனையில் நோயாளிகளை கண்காணித்து வருகிறோம் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் சீராக சென்றுகொண்டு வருகிறது என தெரிவித்தார்.