சீனாவின் உஹான் மாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றால் இந்தியாவில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக இயல்புநிலை திரும்பிய நிலையில் 2021ஆம் ஆண்டின் ஏப்ரம் மற்றும் மே மாதங்களில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை பரவல் பலரையும் கடுமையாக பாதித்தது, ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கைகள் போதாமை உள்ளிட்ட பிரச்னைகள் கொரோனா நோயாளிகளை வாட்டி எடுத்தன. பின்னர் அரசால் போடப்பட்ட பொதுமுடக்கம் அனைவரது வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதித்தது.  


 



நிலைமைகளை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசிற்கு பொருளாதார உதவி பெரிதும் தேவைப்பட்டது. மேலும் ஒன்றிய அரசு உதவிகளை செய்து வந்தாலும் அது குறிப்பிட்ட அளவிற்கு போதுமானதாக இல்லை. ஆகவே மாநில அரசு கொரோனாவால் பாதிக்கபட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க மக்களிடம் உதவிகளை எதிர்பார்த்து அறிவிப்பை வெளியிட்டது. அதன் அடிப்படையில் தொழில்முனைவோர்கள், வசதி படைத்தோர், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் தொடங்கி பள்ளி மாணவர்கள் சிறுவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்க உண்டியலில் சேர்த்து வைத்த  தொகை வரைக்கும் முதல்வரின் நிவாரண நிதிக்கு வாரி வழங்கினர்.


அதற்கு  ஏழை முதல் தொழில் அதிபர் வரை அனைவரும் கொரோனா நிவாரண நிதியை அரசுக்கு வழங்கினார்கள். அதே சமயம் பிச்சை எடுத்து திரட்டிய பணத்தை ஒருவர் கொரோனா நிவாரண நிதிக்கு வங்கி மூலம் அனுப்பி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் ஒருவர் .




தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆழங்கிணற்றை சேர்ந்தவர் பாண்டியன் (70). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர் ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து வருகிறார். அப்போது கிடைக்கும் பணத்தில் தன் சாப்பாட்டுக்கும், வீட்டுக்கும் அனுப்பியது போக மீதம் உள்ள பணத்தை கொண்டு சமூக சேவைகளை செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தான் பிச்சை எடுக்கும் பணத்தை கொண்டு கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ முடிவு செய்தார். அதன்படி கடந்த சில நாட்களாக அவர் ஊர் ஊராக சென்று பொதுமக்களிடம் பிச்சை எடுத்தார். தற்போது ஊரடங்கு தளர்வில் கன்னியாகுமரி பகுதியில் பிச்சை எடுத்து அதன் மூலம் கிடைக்கும் ஒரு ரூபாய் , 5 ரூபாய் . 10 ரூபாய் என சில்லறைகளை அள்ளி கொண்டு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்தார் .




அங்கு சென்று அதிகாரிடம் கொரோனா நிவாரண நிதி கொடுக்க வந்துள்ளேன் என்று கூறவே அதிகாரிகள் நெகிழ்ந்து போனார்கள் . எவ்வளவு தொகை என்று கேட்கவே 10,000 என்று பிச்சைக்காரர் கூறவே அதிகாரிகளுக்கு இது மேலும் அதிர்ச்சியாக அமைந்தது. அப்போது பிச்சை எடுத்ததின் மூலம் கிடைத்த 10 ஆயிரத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுபற்றி நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த  பாண்டியன் கூறும்போது,



 

‘‘நான் தர்மம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்தே சமூக சேவை செய்வதில் ஆர்வம் அதிகம். தற்போது வரை என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்கிறேன். முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு கடைசியாக ரூபாய் 10 ஆயிரத்தை நாகர்கோவிலில் உள்ள வங்கி மூலம் அனுப்பி வைத்தேன். இதுவரை கொரோனா நிவாரண நிதிக்கு மட்டும் மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளேன்’’ என்றார்.