இது குறித்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, செப்டம்பர் 1ம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறந்த பின்னரும் கொரோனா தொற்று குறைவாக இருந்தால் தரிசன அனுமதி குறித்து முடிவெடுக்கப்படும். தியேட்டர், கடற்கரை திறப்பால் தொற்று எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களுக்காக காத்திருப்பதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது.


முன்னதாக, தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 9-ந் தேதி காலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய்த் தொற்று பரவல் அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அரசு உயர் அலுவலர்கள் மற்று் காவல்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனடிப்படையில், நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அதிகளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டது. இக்கட்டுப்பாடுகளுடன் கடந்த 23-ந் தேதி காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.  இந்நிலையில் வழிபாட்டு தலங்களுக்கான தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது




முன்னதாக,செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 


தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "செப்டம்பர் 1ம் தேதி (1-9-2021) முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படும். இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். மேற்படி உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை 15 - 9 -2021-க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும். 


அனைத்து கல்லூரிகளும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையில் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.


அனைத்து பட்டய படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.