வங்கக்கடலில் உருவாகும் புயல் வட தமிழ்நாட்டை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “வங்க கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நிலவுகிறது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் மேலும் தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 3ஆம் தேதி புயலாக வலுப்பெறும். பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து 4 ஆம் தேதி அதிகாலை வட தமிழகம் தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் புயலாக நிலவக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. 59 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. 16 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் நான்கு தினங்களில் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்.


கனமழையைப் பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். டிசம்பர் 2 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும்.  டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை


இன்று தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் டிசம்பர் 1 ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், டிசம்பர் 2 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று ஆனது 50 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், 3 ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் மற்றும் மதியம் மேற்கு வங்க கடலில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும்,  வட தமிழகம் தெற்கு ஆந்திரா கடல் பகுதிகளில் 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும், 4 ஆம் தேதி வட தமிழகம் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகளில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மேலும், வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரையில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதியில் 33 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இயல்பு அளவு 35 செ.மீ. ஆகும். இது 6 சதவீதம் குறைவு. சென்னையைப் பொறுத்தவரை 59 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது இயல்பு அளவு 64 செ.மீ. இது இயல்பான அளவை விட 8 சதவீதம் குறைவு” என தெரிவித்துள்ளார்.