தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 16 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது இன்றைய தினம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 02-12-2023 வாக்கில் புயலாக வலுப்பெற கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் மதியம் 1 மணி வரை 16 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இன்று (நவம்பர் 30) பகல் 1 மணி வரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், வேலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்துக்கு வரவேண்டிய 4 விமானங்கள், புறப்பட வேண்டிய 4 விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை - சேலம், சென்னை - ஆந்திரா, சென்னை - அபுதாபி, இலங்கை - சென்னை, ஷாங்காய் - சென்னை, ஆந்திரா - சென்னை, சேலம் - சென்னை உள்ளிட்ட 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.